திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், சூர்யநகரம், பட்டாபிராமபுரம், பெரிய கடம்பூர், வீரகநல்லுார், பீரகுப்பம், சிறுகுமி மற்றும் மாம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண், தோட்டக்கலை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை ஆகியவற்றின் மூலம் பல்வேறு நலதிட்ட உதவிகள் விவசாயிகள் வழங்கப் படவுள்ளன.
இதையடுத்து மேற்கண்ட ஆறு ஊராட்சிகளில் இருந்து மொத்தம், 99 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு திருத்தணி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த பண்ணையம் சார்பில் விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி வேளாண் உதவி இயக்குனர் சம்பத் முன்னிலையில் நேற்று நடந்தது.இதில், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் கோமதி, தன் துறையில் விவசாயிகளுக்கான திட்டம் குறித்து விளக்கி கூறினார்.
திருத்தணி பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் பிரேம்குமார் பங்கேற்று வங்கியின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கும் கடனுதவிகள் குறித்து விளக்கினார்.
கால்நடை துறையின் சார்பில் மருத்துவர் செந்தில்குமார் கால்நடைகளை தாக்கும் நோய்கள் அதை தடுக்கும் முறைகள் குறித்து விளக்கி பேசினார்.
தொடர்ந்து திருத்தணி வேளாண் அலுவலர் பிரேம் பேசியதாவது:
விவசாயிகள் பயிரிடும் போது சில யுத்திகளை கடைப்பிடிக்க வேண்டும். அதாவது நெல் பயிரை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு, வரப்புகளில் உளுந்து பயிறு விதைகள் விதைக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.