''அதிகாரிகள் ஆசியோட வசூலை வாரிக் குவிக்காரு வே...'' என்றபடியே, பெஞ்சில் வந்தமர்ந்தார் அண்ணாச்சி.
''விபரமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''சேலம், கருப்பூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட, எட்டு இடங்கள்ல ஒரு நம்பர் லாட்டரி சீட்டும்; 16 இடங்கள்ல, 24 மணி நேர, 'சரக்கு' விற்பனையும் களைகட்டுது வே...
''மாசம் பொறந்தா, லாட்டரி வியாபாரிகள் தலா, 50 ஆயிரம், சரக்கு கோஷ்டிகள் தலா, 25 ஆயிரம் ரூபாயை, 'டாண்'னு குடுத்துடுதாவ... ஸ்டேஷன் துணை அதிகாரி ஒருத்தர் தான் பொறுப்பா வசூல் பண்ணி, உயர் அதிகாரிகளுக்கு பிரிச்சு குடுக்காரு...
''மேலிடத்துஆதரவு அவருக்கு இருக்கிறதால, இந்த வசூல் வேட்டையை தடுக்க வேண்டிய பெண் உயர் அதிகாரி, கண்டும் காணாம இருக்காங்க வே...'' என்றார், அண்ணாச்சி.
'ராஜா... ராஜாதி ராஜன் இந்த ராஜா...' என்ற பாடலை முணுமுணுத்தபடியே வந்த அந்தோணிசாமி, அடுத்த மேட்டரை பேச ஆரம்பித்தார்...
''சென்னை, ஆவடி அடுத்த மோரை ஊராட்சி யில, அரசு ஆவணப்படி, 745 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் இருக்குதுங்க... 2019ல, உள்ளாட்சி தேர்தல் முடிஞ்சு, அரசியல்வாதிகள் கையில நிர்வாகம் வந்ததும் இந்த புறம்போக்கு நிலங்கள், கொஞ்சம் கொஞ்சமா தாரை வார்க்கப்படுதுங்க...
''குறிப்பா, மோரை, புதிய கன்னியம்மன் நகர் பக்கத்துல இருக்கிற வினோபா நகர், ஜெ.ஜெ., நகர் சுற்று வட்டாரப் பகுதியில உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆசியுடன், அரசு புறம் போக்கு நிலங்கள் கபளீகரம் செய்யப்படுதுங்க...
''அங்க, 500 சதுர அடி நிலத்தை, 3 லட்சம் ரூபாய்க்கு விற்குறாங்க... நில ஆக்கிரமிப்பாளர்கள், 'பால்' மணம் மாறாத அமைச்சர் பெயரைச் சொல்லி புகுந்து விளையாடுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''டி.ஜி.பி., சைலேந்திர பாபு வர்ற ஜூன் மாசத்தோட, 'ரிட்டையர்' ஆறார்... அடுத்த, டி.ஜி.பி., யார்னு போலீஸ் வட்டாரத்துல பரபரப்பு கிளம்பிடுத்து...'' என, கடைசி மேட்டருக்கு முன்னுரை தந்தார் குப்பண்ணா.
''யார், யார் போட்டியில இருக்காங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''வழக்கமா, 'சீனியாரிட்டி' அடிப்படையில மூணு அதிகாரி பெயர்களை, மத்திய உள்துறைக்கு தமிழக அரசு அனுப்பி வைக்கும்... அதுல இருந்து ஒருத்தரை மத்திய அரசு, 'டிக்' அடிக்கும் ஓய்...
''சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், டில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, காவலர் வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குனர் ஏ.கே.விஸ்வநாதன், ஊர்க்காவல் படை தலைவர் பி.கே.ரவி, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ் தாஸ் பெயர்கள் சீனியாரிட்டி லிஸ்ட்ல இருக்கு ஓய்...
''இதுல சஞ்சய் டில்லி கேடர்ல இருக்கார்... ராஜேஷ் தாஸ் மேல பாலியல் குற்றச்சாட்டு இருக்கு... இதனால, மூணு பேர் தான் போட்டியில இருக்கா ஓய்...
''இதுல ரவி, முன்ன டி.ஐ.ஜி.,யா இருந்தப்ப, அவருக்கு கீழ இருந்த சில அதிகாரிகளின் தவறு களை சுட்டிக்காட்டி, 'மெமோ' குடுத்தாராம்... அதை மனசுல வச்சுண்டு, அவாள்லாம் இப்ப அவரைப் பற்றி மொட்டை கடிதாசிகளை மேலிடத்துக்கு தட்டி விட்டிருக்கா...
''இதனால, கொதிச்சு போயிருக்கற ரவி, அவா மேல, 'லீகல் ஆக் ஷன்' எடுக்க தயாராயிண்டு இருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.