சென்னை:'டாஸ்மாக்' கடைகளை கணினி மயமாக்கும் திட்டத்தை, செயல்படுத்தும் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டரில் பங்கேற்பதற்கான அவகாசம், மார்ச், 8வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 5,341 மதுக் கடைகளை நடத்துகிறது. அந்தக் கடைகள் வாயிலாக, தினமும் சராசரியாக, 130 கோடி ரூபாய் மதிப்பிலான, பீர் மற்றும் மது வகைகள் விற்பனையாகின்றன.
கிடங்குகளில் இருந்து, மதுக்கடைகளுக்கு மது பானங்களை அனுப்புவது முதல், 'குடி'மகன்களுக்கு விற்பது வரை அனைத்தும் கணினிமயமாக்கப்பட உள்ளன.
இதனால், விற்பனை, வசூல் விபரங்களை, உடனுக்குடன் அறிய முடியும். ஊழியர்களும், ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரசீது தர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
கணினிமய திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, டாஸ்மாக் நிறுவனம், ஜன., 12ல் டெண்டர் கோரியது.
டெண்டரில் பங்கேற்க இம்மாதம், 22ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. தற்போது, அந்த அவகாசம், மார்ச், 8 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் பொது மேலாளர் ஒருவர் கூறியதாவது:
டெண்டர் தொடர்பான சந்தேகங்களை விளக்கும் கூட்டம், சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில், 30 நிறுவனங்கள் பங்கேற்றன.
ஆவணங்களை சமர்ப்பிக்க, கூடுதல் அவகாசம் அளிக்கும் வகையில், கடைசி நாளை நீட்டிக்குமாறு, அந்த நிறுவனங்கள் வலியுறுத்தின.
டெண்டரில் அதிக நிறுவனங்கள் பங்கேற்றால், அவற்றுக்குள் போட்டி ஏற்பட்டு, குறைந்த விலைப் புள்ளி கிடைக்கும். எனவே, டெண்டர் கடைசி நாள் மார்ச், 8வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.