கோவை:மாவட்ட அளவிலான இரண்டாம் டிவிஷன் கால்பந்து லீக் போட்டியில், பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லுாரி அணி, இரண்டு கோல்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான இரண்டாம் டிவிஷன் கால்பந்து போட்டிகள் கோவைப்புதுார் மைதானத்தில் நடந்தன.
இதில், பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லுாரி, கோயம்புத்துார் பார் அசோசியேஷன் புட்பால் கிளப் (சி.பி.ஏ.எப்.சி.,) அணிகள் மோதின.
போட்டி துவங்கிய முதலே, இரண்டு அணி வீரர்களும் கோல் அடிக்க பெரிதும் போராடினர்.
போட்டியின், 20வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய பிஷப் அப்பாசாமி அணியின் ஷியாம், கோல் அடித்து அசத்தினார்.
முப்பதாவது நிமிடத்தில் விக்கி மற்றொரு கோல் அடித்து எதிரணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். முதல் பாதியின் முடிவில் பிஷப் அப்பாசாமி அணி, இரண்டு கோல் அடித்து முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் கோல் அடிக்க வேண்டுமென்கிற முனைப்பில் சி.பி.ஏ.எப்.சி., அணியினர் களமிறங்கினர்.
கோல் அடிக்க வாய்ப்புகள் கிடைத்தும், அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் வீணடித்தனர்.
பிஷப் அப்பாசாமி அணியினர் தடுப்பாட்டத்திலேயே கவனம் செலுத்தினர். ஆட்ட நேர முடிவில், பிஷப் அப்பாசாமி அணி, 2-0 என்ற கோல் கணக்கில், சி.பி.ஏ.எப்.சி., அணியை வென்றது.