சென்னை:சென்னையில்,- பைனான்சியரிடம் பணியாற்றி வந்த ஊழியரை அடித்து கொன்று, உடலை ரகசியமாக எரித்தது தொடர்பாக, மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை, நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் பாபுஜி, 51. இவர் அங்குள்ள பைனான்சியரிடம் பணம் வசூல் செய்து தரும் ஊழியரக பணியாற்றி வந்தார். இவரை இரு நாட்களாக காணவில்லை என அவரது குடும்பத்தார், நொளம்பூர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பாபுஜி கடைசியாக அவரது முதலாளியை பார்க்க சென்றது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், வசூல் செய்வதில் பணம் மோசடி செய்தது தொடர்பாக பாபுஜியை அடித்து உதைத்ததில், அவர் இறந்தது தெரிந்தது. உடலை என்ன செய்வதென தெரியாமல், துரைப்பாக்கம் குப்பை மேடு பகுதியில் வைத்து எரித்துள்ளனர். தனிப்படை போலீசார் அங்கு சென்று பார்த்ததில் எரிந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. பின், அந்த உடல் பாபுஜி உடையது என அடையாளம் காணப்பட்டது. இது தொடர்பாக மூன்று பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.