திருப்பூர்:கோரிக்கையை வலியுறுத்தி 'கேபிள் டிவி' ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் சேனல்களுக்கான கட்டணத்தை உயர்த்திக்கொள்ள மத்திய தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதற்கு, 'கேபிள் டிவி' ஆபரேட்டர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருப்பூர் 'கேபிள் டிவி' ஆபரேட்டர்கள் பொதுநலச்சங்கம் சார்பில், கட்டண சேனல்களின் விலையை கட்டுப்படுத்த கோரி, கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாநில தலைவர் வீரமுத்து தலைமை வகித்தார்;செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
'கேபிள் டிவி' ஆபரேட்டர்கள், கையில் பதாகை ஏந்தியபடி பங்கேற்றனர். கட்டண சேனல்களின் விலையை உயர்த்தக்கூடாது; மறு பரிசீலனை செய்து, கட்டண உயர்வை தடுக்கவேண்டும். பொதுமக்களையும், 'கேபிள் டிவி' ஆபரேட்டர்களையும் பாதுகாக்கவேண்டும்,' என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.