பெரம்பலுார்:தி.மு.க., - எம்.பி., ராஜாவின் அண்ணன், பெரம்பலுார் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., சார்பில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி எம்.பி.,யும், தி.மு.க., துணை பொதுச் செயலருமான ராஜா, ஹிந்துக்களுக்கு எதிராக, அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவிப்பார்.
அதிர்ச்சி
இவரது அண்ணன் கலியபெருமாள், சில நாட்களுக்கு முன், ஹிந்து சமய அறநிலையத்துறையில், பெரம்பலுார் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக நியமித்துள்ளனர்.
ஹிந்து விரோத கருத்துகளை தெரிவித்து வரும் ராஜாவின் அண்ணனுக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறையில், அறங்காவலர் குழு தலைவர் பதவி கொடுத்ததால், ஹிந்து அமைப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
'தெய்வ பக்தி இல்லாதவர்களை, கோவில் அறங்காவலர்களாக நியமிப்பதை அனுமதிக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே, ஒரு வழக்கு தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
தமிழக கோவில்களில் அறங்காவலர்களை நியமிக்கும்போது, அவரின் அரசியல் சார்பு குறித்த விபரங்களை கட்டாயம் பெற வேண்டும் என்றும், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் தலையீடு
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, கோவில் அறங்காவலர்கள் நியமனத்தில் அரசியல்வாதிகளின் தலையீடுகளை குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஹிந்து மத விரோத போக்கை கடைப்பிடிக்கும் ராஜா, தன் அண்ணன் கலியபெருமாள், தெய்வபக்தி உள்ளவர் என்பதை காரணம் காட்டியும், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியும், அவருக்கு அறங்காவலர் குழு தலைவர் பதவி வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதை எதிர்த்து, பெரம்பலுார் மாவட்ட பா.ஜ., சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலுார் பா.ஜ., மாவட்ட தலைவர் செல்வராஜ், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், பா.ஜ., மாநில துணை தலைவருமான பால்கனகராஜுவிடம், வழக்கு தொடர ஆவணங்களை அளித்துள்ளார்.