வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-'பெயரளவில் சமூக நீதி நாடகம் ஆடுவதை நிறுத்தி விட்டு, பட்டியல் இன சகோதர, சகோதரிகள் முன்னேற்றத்துக்காக, பிரதமர் முன்னெடுத்து வரும் நலத் திட்டங்களை செயல்படுத்த, தி.மு.க., அரசு முன்வர வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
![]()
|
அவரது அறிக்கை:
மத்திய அரசு ஆண்டுதோறும், பட்டியல் பிரிவு மக்கள் முன்னேற்றத்துக்காக, மாநிலங்களுக்கு பெருமளவில் நிதி ஒதுக்கி வருகிறது. அப்படி ஒதுக்கப்பட்ட நிதியில், 2016 முதல், 2021 வரை, 2,900 கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
தி.மு.க., ஆட்சியில், 2021 - 22ல் ஓராண்டில், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 2,418 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை.
நடப்பு நிதியாண்டில், டிசம்பர் வரையிலான தகவலின்படி, மத்திய அரசு தமிழகத்தின் பட்டியலின சகோதர, சகோதரிகளுக்கு ஒதுக்கிய, 16 ஆயிரத்து, 442 கோடி ரூபாய் நிதியில், தமிழக அரசு, 10 ஆயிரத்து, 466 கோடி ரூபாயை செலவிடாமல் வைத்துள்ளது. இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சிக்கு உள்ளானேன்.
கல்வி, வீட்டு வசதி திட்டங்கள், வேலைவாய்ப்பு, மாணவர் விடுதிகள் போன்ற அடிப்படை தேவைகள் பல நிறைவேற்றப்படாமல் இருக்க, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியையும், முழுமையாக பயன்படுத்தாமல் இருப்பது, தி.மு.க., அரசின் மெத்தனத்தையும், சமூகத்தில் பின் தங்கியிருக்கும் மக்கள் மீதான கடும் அலட்சிய போக்கையும் காட்டுகிறது.
![]()
|
பெயரளவில் சமூக நீதி என்று மேடை மேடையாக நாடகம் ஆடுவதை நிறுத்தி விட்டு, பட்டியல் இன சகோதர, சகோதரிகள் முன்னேற்றத்துக்காக, பிரதமர் மோடி முன்னெடுத்து வரும் நல திட்டங்களை செயல்படுத்த, தி.மு.க., அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.