விஜயபுரா-திகோடா சுற்றுப்பகுதிகளில், பெரும் சத்தத்துடன் நில நடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். இரவு முழுதும் உறங்காமல் வெளியே அவதிப்பட்டனர்.
விஜயபுராவின், திகோடா, கள்ளகவடகி, கோனசகி, பாபாநகர், ஹுபனுரா, சோமதேவரஹட்டி, மலகனதேவரஹட்டி உட்பட அனைத்து கிராமங்களிலும், நேற்று முன் தினம் இரவு 10:30 மணியளவில், பெரும் சத்தத்துடன் நில நடுக்கம் ஏற்பட்டது.
வீடுகளின் தகடு ஷெட்டுகள் பறந்தன. வீடுகளில் உள்ள பொருட்கள், பாத்திரங்கள் சிதறி விழுந்தன. உறக்கத்தில் இருந்த மக்கள், அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
விடிய, விடிய உறங்காமல் வெளியே அமர்ந்திருந்தனர்.
நில நடுக்கம் ஏற்படுவதற்கு முன், இந்த கிராமங்களின் நாய்கள், விசித்ரமான சத்தத்துடன் ஊளையிட்டன. அதன்பின் சில நொடிகளில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
திகோடா பகுதிகளில், பல ஆண்டுகளாக நில நடுக்கம் ஏற்படுகிறது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறை ஏற்பட்டதால், மக்கள் பீதியில் உள்ளனர்.