பேரூரில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த கலைநயமிக்க கட்டடங்களைப் பாதுகாக்க வலியுறுத்தும் வகையில், புகைப்படக் கண்காட்சி நடந்தது.
குமரகுரு காலேஜ் ஆப் லிபரல் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் மற்றும் கோயம்புத்தூர் கிரியேட்டிவ் கலெக்டிவ் இணைந்து, 'வையம்' என்ற புகைப்பட கண்காட்சி, பேரூரில் உள்ள மூன்று மண்டபங்களில், கடந்த, 23ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. இக்கண்காட்சி, (26ம் தேதி) இன்று இரவு, 8:30 மணியுடன் நிறைவடைகிறது.
இக்கண்காட்சியில், வனவிலங்குகளின் அரியவகை புகைப்படம் மற்றும் இயற்கையின் அழகை எடுத்துரைக்கும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை, குமரகுரு காலேஜ் ஆப் லிபரல் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியின் விஸ்காம் துறை மாணவர்கள் செய்துள்ளனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:
பேரூரில் உள்ள பழமையான மூன்று மண்டபங்களில், புகைப்பட கண்காட்சி நடத்தி வருகிறோம். இக்கண்காட்சியில், 40க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்கள் எடுத்த அரிய வகை புகைப்படங்களை காட்சிப்படுத்தியுள்ளோம். வன விலங்குகள் மற்றும் இயற்கை சார்ந்த புகைப்படங்கள் என, 150 புகைப்படங்களை தேர்வு செய்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவைகளை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.
கோவையில், நூற்றாண்டு பழமை வாய்ந்த கலை நயமிக்க கட்டடங்கள் உள்ளன. ஆனால், காலப்போக்கில் இக்கட்டடங்களை மாற்றம் செய்து அல்லது இடித்து புதிய கட்டடம் கட்டி வருகின்றனர். இதனால், பழமையான கலைநயமிக்க கட்டடங்களை நாம் இழந்து வருகிறோம்.
இக்கட்டடங்களை பாதுக்காக்க வலியுறுத்தியும், இக்கட்டடங்களின் சிறப்பு குறித்து மக்களிடம் கொண்டு செல்லவும், நூற்றாண்டு பழமை வாய்ந்த கலை நயமிக்க கட்டடங்களான பேரூரில் உள்ள மண்டபங்களில், புகைப்பட கண்காட்சியை வைத்துள்ளோம். இங்கு வருபவர்கள், புகைப்படங்களைப் பார்வையிடுவதோடு, இந்த மண்டபங்களில் உள்ள கலைநயம் மிக்க சிற்பங்களையும் பார்வையிடுவார்கள். இதன்மூலம் பழமையான கட்டடக்கலையும் மக்களிடம் சென்றடையும்.
இவ்வாறு, மாணவர்கள் கூறினர்.
இளைய தலைமுறையின் இந்த இனிய முயற்சிக்கு, எல்லோரும் ஒத்துழைப்பு அளிப்பது அவசியம்!