சென்னை: முதல்வர் கோப்பைக்கான டென்னிஸ் போட்டிகள், நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் அரங்கில், நேற்று முன்தினம் துவங்கின. பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நேற்று நிறைவடைந்தன.
இதில், மாணவர்களில் 40 பேர், மாணவியரில் 22 பேர் என மொத்தம் 62க்கும் மேற்பட தனிநபர், இரட்டையர் பிரிவுகளில் மோதினர்.
முடிவில், தனி நபரில் மாணவியருக்கான போட்டியில், திருவள்ளூர் சூரப்பட்டு வேலம்மாள் பள்ளி மாணவி லுக் ஷிதா மற்றும் முகப்பேர் டி.ஏ.வி., பள்ளி மாணவி திவ்யா, இறுதி போட்டிக்கு நுழைந்தனர்.
இறுதிச்சுற்று, 6 - 6 என்ற கணக்கில் 'டிரா' ஆனது. தொடர்ந்து நடந்த 'டை பிரேக்' சுற்றில், 7 - 3 என்ற கணக்கில் லுக் ஷிதா வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்தார்.
அதேபோல, மாணவருக்கான போட்டியில், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் பகுதியில் உள்ள வேல்ஸ் வித்யாஷிரம் பள்ளியின் கீர்த்திவாசன் முதலிடத்தை பிடித்தார்.
இரண்டாமிடத்தை, சென்னையைச் சேர்ந்த மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் பாலாஜி கைப்பற்றினார். நாளை, பளு துாக்கும் போட்டியும், 28ல் கடற்கரை கைப்பந்து போட்டிகளும் சென்னையில் நடக்கின்றன.