சாம்ராஜ் நகர்-''பா.ஜ.,வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால், ஒவ்வொரு ஆண்டும் வீட்டு மனை ஒதுக்கப்படும்,'' என வீட்டு வசதி துறை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.
சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டுலுபேட்டில் நேற்று பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் அமைச்சர் சோமண்ணா பேசியதாவது:
குண்டுலுபேட்டில் 30 ஆண்டுகளாக யாருக்கும் நிலம் ஒதுக்கப்பட வில்லை. வறுமைக்கு ஜாதி, குலம், கட்சி கிடையாது. தகுதி உடைய அனைத்து ஏழை மக்களுக்கும் நிலம் வழங்க அரசு தயாராக உள்ளது.
பெங்களூரில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட பிரதமர் மோடி 600 கோடி ரூபாய் கொடுத்திருந்தார். அதற்கு தேவையான இடத்தை வழங்க, அப்போதைய அரசு கண்டுகொள்ளவில்லை.
நான் அமைச்சரான பின், பெங்களூரில் நிலம் அடையாளம் காணப்பட்டு, 52 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டன. ஏற்கனவே, 5,000 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கியுள்ளோம்.
பா.ஜ.,வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால், ஒவ்வொரு ஆண்டும் வீட்டு மனை ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.