திருவள்ளுர்: கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோய் வாயிலாக கால்நடை இறப்பும் விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.
பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத் தன்மை, கருச்சிதைவு, எடை குறைதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட பசுவின் பாலைக் குடிக்கும் மூன்று மாத வயதுக்கு உட்பட்ட கன்றுகள் இறக்க நேரிடும்.
எனவே, கால்நடைகளைத் தொற்று நோய்களில் இருந்து காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது.
எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 84 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய கால்நடை நோய்த் தடுப்பூசி திட்டத்தின்கீழ் மூன்றாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் வரும் மார்ச் 1-21ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கால்நடை உரிமையாளர்கள் தங்களின் பசு, எருது, எருமை மற்றும் நான்கு மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக்குட்டிகள் ஆகியவற்றுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.