ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகள் அமைந்துள்ளன. இங்கு பிராதான தொழில் விவசாயமாக இருந்தது.
ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், வல்லம், ஒரகடம் ஆகிய ஐந்து இடங்களில் சிப்காட் தொழிற் பூங்கா வந்த பின், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தொழிற்சாலைகளாகவும், குடியிருப்புகளாகவும் மாறி வருகின்றன.
இதனால், கால்நடைகளின் மேய்சல் நிலங்கள் வெகுவாக குறைந்து விட்டன. இந்நிலையில், காலி நிலங்களில் வளர்ந்து கிடக்கும் புற்களை மாடு, ஆடுகள் மேய்ந்து வந்தன.
இந்நிலையில், கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், வாகன ஓட்டுனர்கள் சிலர் சிகரெட் பிடித்து அவற்றை வெளியே வீசி எரிவதால், கால்நடைகளின் மேய்சல் நிலங்கள் தீயில் கருகி சாம்பலாகி வருகின்றன.
மேலும், அரசு நிலம் மற்றும் தனியார் நிலத்தில் வளர்ந்துள்ள செடிகள் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்படுகிறது.
இதனால் கால்நடைகள் புற்கள் கிடைக்காமல் அலைந்து திரிகின்றன.
உணவு தேடி மாடுகள் நெடுஞ்சாலையில் உள்ள மீடியனில் வளர்ந்து கிடக்கும் புற்களை மேய வருவதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கால்நடைகளின் மேய்சல் நிலங்களை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நலஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.