வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராமேஸ்வரம்--ராமாயண தொடர்புடைய தனுஷ்கோடி புயலின் கோர தாண்டவத்திற்கு பின் 59 ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல் உருகுலைந்து கிடக்கிறது. இங்கு வரலாற்று நினைவு சின்னம், பொழுது போக்கு அம்சங்களை ஏற்படுத்தி புதுப்பொலிவு ஏற்படுத்த வேண்டும்.
![]()
|
ராமாயணத்துடன் தொடர்புடையது தனுஷ்கோடி. ராவணன் சீதையை சிறை பிடித்து சென்றதும் ராமர், லட்சுமணருடன் வானர சேனைகள் அனுமான் தலைமையில் தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு பாலம் அமைத்து சீதையை மீட்டு வந்தனர். அப்போது ராமபிரான் வில்லால் (தனுஷ்) எய்த அம்பு விழுந்த இடமே தனுஷ்கோடி என்றழைக்கப்படுகிறது.
அக்காலத்தில் புனித யாத்திரை வரும் பக்தர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து கட்டுமரம், நாட்டு படகுகள் மூலம் தனுஷ்கோடி வந்து திதி, தர்ப்பணம் பூஜை செய்து கடலில் புனித நீராடுவர். பின் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வார்கள்.
கப்பல் போக்குவரத்து
புனித தலமாக விளங்கிய தனுஷ்கோடியில் இருந்து 1915ல் ஆங்கிலேயர்கள் இலங்கைக்கு இரு பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவக்கினார்கள். இதனை தொடர்ந்து இங்கு ஊராட்சி அலுவலகம், தபால் நிலையம், விநாயகர் கோயில், மாதா சர்ச், ரயில் நிலையம், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல வணிக ரீதியான கட்டடங்கள் உருவாயின.
மேலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் இப்பகுதி சுற்றுலா தலமாகவும் மாறியது. இதனால் தனுஷ்கோடி ராமநாதபுரம் மாவட்டத்தில் பணப்புழக்கம் நிறைந்த வணிகப்பகுதியாக இருந்தது. இதனால் வெளியுலகில் ராமேஸ்வரத்தை விட தனுஷ்கோடியே முக்கியத்துவம் வாய்ந்த தலமாக விளங்கியது.
புரட்டி போட்ட 1964 புயல்
தனுஷ்கோடியை 1964 டிச.,22 நள்ளிரவில் வங்க கடலில் ஏற்பட்ட புயல் புரட்டி போட்டது. விநாயகர் கோயில், சர்ச், ரயில் நிலையம், தபால் நிலையம் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களும் இடிந்து சின்னாபின்னமாகி கடலுக்குள் மூழ்கின. அப்போது இங்கு வந்த பயணிகள் ரயிலும் சிக்கியது.
விநாயகர் கோயில், சர்ச், ரயில் நிலையத்தின் எஞ்சிய பகுதிகள் புயலின் தாக்கத்தின் எச்சமாக இன்றும் காட்சியளிக்கிறது. இப்புயல் தாக்கி பல ஆண்டுகள் ஆன நிலையில், சாலை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்த எந்த அரசும் அக்கறை கட்டவில்லை.
முதல் முறையாக 2017ல் பிரதமர் மோடி உத்தரவின் படி ரூ.50 கோடியில் தனுஷ்கோடிக்கு 9.5 கி.மீ.,க்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. 53 ஆண்டுகளுக்கு பின் தனுஷ்கோடிக்கு சாலை வசதி வந்ததால் அன்று முதல் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
அக்கறை காட்டாத தமிழக அரசு
ரூ. 3 கோடியில் தனுஷ்கோடியில் புதைந்து கிடக்கும் வரலாற்று சுவடுகள், கட்டடங்களை புதுப்பித்து ஒலி, ஒளி காட்சி கூடம் அமைக்க, மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும், என 2017ல் அப்போதைய கலெக்டர் நடராஜன் தெரிவித்தார். ஆனால் வரலாற்று தலத்தை புதுப்பிக்க தமிழக அரசு அக்கறை காட்டாமல் இத்திட்டத்தை கிடப்பில் போட்டது.
இதனால் புயலில் சேதமடைந்தும் கம்பீரமாக நிற்கும் கோயில், சர்ச் உள்ளிட்ட பல கட்டடங்கள் முழுமையாக இடிந்து தனுஷ்கோடி தனது அடையாளத்தை முழுமையாக இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வரலாற்று சின்னங்கள்
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமபிரான் திருப்பாதம் பதித்த இப்புனித தலத்தை
பாதுகாக்கும் விதமாக தனுஷ்கோடியில் ராமரை நினைவு கூரும் விதமாக அவருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்க வேண்டும்.
![]()
|
மேலும் ராமாயண வரலாற்றை அழியாத ஓவியங்கள், சிற்பங்கள் மூலம் உருவாக்க வேண்டும்.
இதன் மூலம் மட்டுமே ராமாயண வரலாற்றில் தொடர்புடைய தனுஷ்கோடியை உலகளவில் பிரசித்த பெற்ற தலமாக மாற்ற முடியும்.
இதன் மூலம் 59 ஆண்டுகளுக்கு பின் தனுஷ்கோடி புனித, சுற்றுலா தலமாக மாறி உலக வரைபடத்தில் முக்கிய இடம் பெறும். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுலா மூலம் அதிக வருவாய் கிடைக்கும்.
மத்திய அரசிடம் தனுஷ்கோடி புத்துயிர் பெற வேண்டி தமிழக அரசு வலியுறுத்த வேண்டும், என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.