10 ஆண்டுக்கும் மேலாக வெள்ளித் திரையில் நடித்து வந்தாலும் 'அயலி' இணைய தொடர் மூலம் ரசிகர்களின் அலைபேசிக்குள்ளேயே நுழைந்து விட்டார் அபி நட்சத்திரா. "என்னால் முடிந்த நடிப்பை கொடுத்தேன்; மீதி எல்லாம் இயக்குனரின் படைப்பு தான்'' என எளிமையாக பேசி வியப்பில் ஆழ்த்தினார். அவர் அளித்த பேட்டி
தங்களது குடும்பம்...
அப்பா மணி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தேனிக்காரர். தற்போது ஜவுளி தொழில் செய்கிறார். அம்மா லட்சுமிக்கு சொந்த ஊர் ராஜபாளையம். தம்பி ஆதி சந்தோஷ் 8ம் வகுப்பு படிக்கிறார் அவரும் சிங்கம் 3, பவர்பாண்டி, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பில் ஆர்வம்...
அப்பா இயக்குனராக ஆசைப்பட்டார். ஆனால் திருமணம் முடிந்ததும் சினிமாவை விட்டு விலகி பிசினஸ் செய்ய வந்துட்டார். அவரது கனவை நிறைவேற்றணும்னு நடிப்பில் ஆர்வம் வந்துச்சு. முதல் படம் ரஜினி முருகனில் குடும்பத்தில் உள்ள குட்டிப் பெண்ணாக நடித்தேன். பசங்க 2, போக்கிரி ராஜா, மருது, தர்மதுரை, மூக்குத்தி அம்மன் போன்ற பல படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தேன்.
அயலிக்கு அப்புறமா...
கிளாஸ்மேட்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளேன். இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் 'ஹிட்லிஸ்ட்' படத்தில் நடிக்கிறேன். அப்புறம் பாடகி ராஜலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் லைசென்ஸ் படத்தில் அவரின் குழந்தை பருவ கேரக்டரில் நடிக்கிறேன்.
நடனத்தில் ஆர்வம்...
முறையாக பரதநாட்டியம் கற்று அரங்கேற்றமும் செய்தேன். நடனத்தில் தனி ஆர்வம் இருக்கிறது.
அயலி வாய்ப்பு எப்படி கிடைத்தது...
மூக்குத்தி அம்மன் படத்தின் உதவி இயக்குனர் ஆன்ட்ரூஸ் தான் அயலிக்கு பரிந்துரைத்தார். ஒரு சீனை கொடுத்து நடித்தவுடனே 'ஓகே' சொல்லி விட்டார் இயக்குனர் முத்து. மேக்கப் இல்லாமல் நடித்தேன்.
அயலியில் பிடித்த வசனம்...
"எந்த சாமியும் நம்மள படிக்கக் கூடாதுன்னெல்லாம் சொல்லாது” என்ற அழுத்தமான வசனம் ரொம்பவே பிடித்தது.
என்ன படிக்கிறீங்க...
பி.டெக்., படித்து வருகிறேன். நடிப்பை விட படிப்பு முக்கியம்.