இந்தியர்களில் கணிசமானவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிய வீட்டிற்கு செல்ல விரும்புவதும், இவர்களில் பெரும்பாலானோர் சொந்த வீட்டிற்கு செல்வதில் ஆர்வம் கொண்டிருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பணியிடத் தேர்வில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக, நகரங்களுக்கு வெளியே குடியிருப்பதை பலரும் விரும்பத் துவங்கியிருப்பதாக கருதப்படும் நிலையில், பெரும்பாலானவர்கள் நகரங்களின் மையப் பகுதிக்கு அருகே வசிப்பதை விரும்புவதாக, சி.பி.ஆர்.இ., நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில், 44 சதவீதம் பேர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிய வீட்டிற்கு செல்ல விரும்புவதாகவும், இவர்களில் 70 சதவீதம் பேர் வாடகை வீட்டை விட சொந்த வீட்டை தேர்வு செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனினும், வாடகை வீட்டை நாடுபவர்களும் அதிகம் இருக்கின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.
நடுத்தர வயதினரை விட, இளம் தலைமுறையினர் அதிக அளவில் புதிய வீட்டை நாடுகின்றனர். வீடுகள் விற்பனையில் இவர்களின் ஆர்வம் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், புதுடில்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் புறநகர் பகுதிகள் எழுச்சி பெற்று வருவதையும் ஆய்வு உணர்த்துகிறது.