போத்தனுார்:போத்தனுார் அருகே மூவரை கத்தியால் குத்திய பாத்திர வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
போத்தனுார் அடுத்த மேட்டூர், அங்கமுத்து கவுண்டர் வீதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 26; பாத்திர வியாபாரி. நேற்று முன்தினம் மாலை வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். வெளியே கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள் அடித்த பந்து, சாப்பாட்டு தட்டில் விழுந்தது. வெளியே வந்த கோபாலகிருஷ்ணன் தகாத வார்த்தைகளால் சிறுவர்களையும், அவர்களது பெற்றோரையும் திட்டினார்.
அங்கிருந்த பிரதீப், டெய்லர் செந்தில்குமார், டிரைவர்கள் கண்ணன், சசிகுமார் ஆகியோர் இதுகுறித்து கேட்டனர். ஆத்திரத்துடன் வீட்டினுள் சென்ற கோபாலகிருஷ்ணன் சுத்தியல், கத்தியுடன் வெளியே வந்தார். பிரதீப்பை சுத்தியால் தாக்கினார்; மற்ற மூவரும் தடுக்க முயன்றனர்.
கத்தியை காட்டி மிரட்டிய கோபாலகிருஷ்ணன், கண்ணனின் கையிலும், செந்தில்குமார், சசிகுமார் ஆகியோரின் முதுகிலும் குத்திவிட்டு தப்பினார். செந்தில்குமார் கோவை அரசு மருத்துவமனையிலும், மற்ற மூவரும் தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். கண்ணன் புகாரில் போத்தனுார் போலீசார் கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.