குடிநீர் வரி விவகாரத்தில், முகவரி ஒப்பீடு கள ஆய்வின்போது நுகர்வோர் 2,563 பேரின் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இழப்பீடு தொகை 1.50 கோடி ரூபாய் வசூலிக்க வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில், ஆண்டுதோறும் மின் வாரிய நுகர்வோர்களின் முகவரியை ஒப்பீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ள, குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.
![]()
|
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகள் உள்ளன. தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதில், 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்துகின்றனர்.
குடிநீர், கழிவு நீரை பொறுத்தமட்டில், வீட்டு இணைப்பு, வணிகம் சார்ந்த இணைப்பு மற்றும் தற்காலிக இணைப்பு வழங்கப்படுகிறது.
தற்காலிக இணைப்பு என்பது, பழைய வீட்டை இடித்து, புது வீடு கட்டும் போது வழங்குவது. இதற்கு, 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி, ஒரு கை பம்பு குடிநீர் இணைப்பு மற்றும் ஒரு கழிப்பறை வசதியில், கழிவு நீர் இணைப்பு பெற வேண்டும்.
கட்டடம் கட்ட 'பிளான்' வாங்கும் போது, புதிய இணைப்புக்கான சாலை துண்டிப்பு கட்டணம் செலுத்தி, புதிய இணைப்பு வாங்க வேண்டும்.
ஆனால், சிலர் வங்கி கடன், சொத்து பரிமாற்ற தேவைக்காக புதிய இணைப்பு பெற்று, முதல் அரையாண்டுக்கான வரி மற்றும் கட்டணம் செலுத்துவர்.
வருவாய் இழப்பு
அடுத்தாண்டு முதல், பழைய கட்டடத்தின் ரசீதை வைத்து, குறைந்த வரியும், கட்டணமும் செலுத்துவர். புதிய வீட்டுக்கு நிர்ணயித்த கட்டணத்தை மறைத்து விடுவர்.
ஒரே வீட்டு முகவரியில், இரண்டு வரி எண்கள் வாரியத்தில் பதிவாகும். இதனால், வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
மேலும், வீட்டு பயன்பாட்டிற்கு இணைப்பு பெற்று, வணிக பயன்பாட்டில் வாடகைக்கு விடுவர். இதிலும், வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதையெல்லாம் கண்டுபிடிக்க, குடிநீர் வாரியத்தில் போதிய ஊழியர்கள், கட்டமைப்பு வசதிகள் இல்லை. மாநகராட்சியின் வரி மதிப்பீட்டை வைத்து, குடிநீர் வாரியம் வரி வசூலிக்கிறது. துல்லியமான வீடு மற்றும் வணிக பயன்பாடு குறித்த பட்டியல், குடிநீர் வாரியத்திடம் இல்லை.
இதனால், மின் வாரியத்திடம் இருந்து சோதனை அடிப்படையில், குறிப்பிட்ட நுகர்வோரின் முகவரியை வாங்கி, குடிநீர் வாரிய நுகர்வோரின் முகவரியுடன் ஒப்பிட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, மின்வாரியத்திடம் இருந்து, 36 ஆயிரத்து 740 நுகர்வோரின் முகவரியை வாங்கி, மண்டல வாரியாக பிரித்து அனுப்பப்பட்டது.
இதை வைத்து, குடிநீர் வாரிய ஊழியர்கள், நேரடியாக கள ஆய்வில் ஈடுபட்டனர். இந்த பணி, கடந்தாண்டு அக்டோபர் மாதம் துவங்கியது. தற்போது, 100 சதவீதம் ஒப்பீடு பணி முடிவடைந்துள்ளது. மொத்தமுள்ள, 36 ஆயிரத்து 740 பேரிடம் நடந்த ஒப்பீட்டில், 2,563 பேர் வணிக பயன்பாட்டை மறைத்து மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.
இதனால், 1.50 கோடி ரூபாய் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில், 48 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. மீதமுள்ள தொகை வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில், வணிக பயன்பாடு மோசடியை கண்டுபிடிக்க, ஆண்டுதோறும் ஒப்பீடு செய்யும் பணி மேற்கொள்ள, வாரியம் முடிவு செய்துஉள்ளது.
மின் வாரிய ஊழியர்கள், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நேரடியாக சென்று கணக்கீடு செய்வதால், கட்டடம் வீடா அல்லது வணிக பயன்பாடா என தெரிந்து விடும். இதன் அடிப்படையில், மின்வாரிய முகவரியை வாங்கி ஒப்பீடு செய்து, 2,563 பேரின் கணக்கில் வித்தியாசம் கண்டுபிடித்தோம். இதைத்தொடர்ந்து, வணிக பயன்பாடு அடிப்படையில் 'நோட்டீஸ்' வழங்கி, 1.50 கோடி ரூபாயை வசூலித்து வருகிறோம்.
-- குடிநீர் வாரிய அதிகாரிகள்.
![]()
|
மொத்த மண்டலங்களில், நுகர்வோர் கணக்கை ஒப்பீடு செய்ததில், அதிகபட்சமாக அம்பத்துார் மண்டலத்தில், 4,800 பேரில், 690 பேர் கணக்கில் வித்தியாசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.கூடுதல் தொகை செலுத்த வேண்டிய மண்டலமாக, அடையாறு உள்ளது. இங்கு, 299 பேர், 30.27 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.ஆலந்துார் மண்டலத்தில், 3,076 பேரில், 329 பேர் கணக்கில் வித்தியாசம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வணிக அடிப்படையில் வரி நிர்ணயித்ததில் குளறுபடி நடந்ததால், மறு மதிப்பீடு செய்யப்படுகிறது.
- நமது நிருபர் -