வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போத்தனுார்: ''ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும், பழைய பாக்கியுடன் உதவித்தொகை வழங்க முதல்வர் முன்வர வேண்டும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை, நவக்கரை அருகே மாவுத்தம்பதியில், மாற்று கட்சியினர், விவசாயிகள், தன்னார்வ அமைப்பினர், ஆடிட்டர்கள், கிராமிய கலை குழுவினர் பா.ஜ.,வில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடக்கும் விதிமீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க, தலைமை தேர்தல் கமிஷன் தலையிட்டால், 'மாநில சுயாட்சி போய்விட்டது' என்கின்றனர். மாநில தேர்தல் கமிஷன் சரியில்லை என்றால், 'அண்ணாமலை புகார் செய்கிறார்' என, கூறுகின்றனர்.
சரிபட்டு வராது
ஆளும் கட்சியே பரிசுகளை அள்ளி வழங்கி ஊழல் செய்கிறது. ஒவ்வொரு வாக்காளருக்கும், குறைந்தபட்சம், 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்கின்றனர். இது போல செலவு செய்யப்படும் பணம் எங்கிருந்து வருகிறது?
தற்போது தேர்தலை நிறுத்தினால், ஆறு மாதம் கழித்து மீண்டும் தேர்தல் நடக்கும். அப்போதும், இது போல நடக்காது என, உறுதி கூற முடியுமா? இதனால், 'தமிழக அரசியல் சரிபட்டு வராது' என, நல்லவர்கள் ஒதுங்குகின்றனர்.
மக்கள் பிரநிதித்துவ சட்டத்தை மாற்ற, அனைத்து எம்.பி.,க்களும் ஒத்துழைக்க வேண்டும். ஆனால், ஒரு பிரிவு ஒத்துழைக்காது. பணம் கொடுத்தால், ஆறு ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாதவாறு செய்ய வேண்டும்.
மக்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், ஒரு புதிய ஆள் கூட அரசியலுக்கு வர மாட்டார். இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வருவது கடினம். சீமானை போல என்னையும் பேச வைத்து விட்டனர்.
தமிழகத்தின், 38 எம்.பி.,க்கள் நான்காண்டுகளில் என்ன கொண்டு வந்தனர். தேர்தல் களத்தில் வைத்து, பெண்களுக்கான உதவித்தொகையை முதல்வர் அறிவித்திருப்பது, பயத்தில் என்றே நினைக்கிறேன்.
மாற்றம்
இது வரவேற்கத்தக்கது என்றாலும். சொன்ன இடம், விதம் தவறு. ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் பழைய பாக்கியுடன் இத்தொகையை வழங்க முதல்வர் முன்வர வேண்டும். மாற்றம் கொடுக்க அரசியலுக்கு வந்தவன் நான்.
வரும், 2026ல், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் முடிந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என, கூறி விட்டோம். சினிமா போல, அரசியலிலும் உதயநிதி நடிக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.