சேலம் : இரட்டிப்பு பணம் தருவதாக, 10 லட்சம்ரூபாய் மோசடி செய்த வழக்கில் இருவரை கைது செய்த போலீசார், 6 லட்சம்ரூபாயை மீட்டு, காரை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே, பூரல்கோட்டையைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ், 53; ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறார்.
இவரது உறவினர் தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தைச் சேர்ந்த பிரபு, 41. இவர், 2,000 ரூபாய் நோட்டுக்கு, 500 ரூபாய் நோட்டாக கொடுத்தால், 20 சதவீதம் கமிஷன் சேர்த்து தருவதாக கூறினார்.
அதை நம்பிய செல்வராஜ், 10 லட்சம் ரூபாய் கொடுத்தார்; 12 லட்சம் ரூபாயை, பிரபு திருப்பிக் கொடுத்தார். அடுத்து, 10 லட்சம் ரூபாய் கொடுத்தால், இரட்டிப்பாக பணம் தருவதாக பிரபு தெரிவித்தார்.
அதை நம்பி, ஜன., 3ம் தேதி, 10 லட்சம் ரூபாயை செல்வராஜ் கொடுத்தார்.
ஆனால், பிரபு உள்ளிட்ட நான்கு பேர், பணக்கட்டு போல காகித தாள்களை கொடுத்து ஏமாற்றினர்.
செல்வராஜ் புகாரின்படி, கொண்டலாம்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து, பிரபு உள்ளிட்டோரை தேடி வந்தனர்.
இந்நிலையில், பிரபு மற்றும் உடையாப்பட்டி சண்முகம், 45, ஆகியோரை, உடையாப்பட்டி அருகே போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம், 6 லட்சம் ரூபாய் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்; தலைமறைவாக உள்ள கோபி, சக்திவேலை தேடுகின்றனர்.