உத்திரமேரூர், : களியப்பேட்டையில், தாங்கல் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி தாங்கலில் தண்ணீர் சேகரமாக வழிவகை ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட களியப்பேட்டையில் 14 ஏக்கர் பரப்பளவில் தாங்கல் உள்ளது. மழைக்காலத்தில் இத்தாங்கலில் நிரம்பும் தண்ணீர், சுற்றிலும் உள்ள அப்பகுதி விவசாய நிலங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது.
மேலும், இத்தாங்கலில் சேகரமாகும் தண்ணீர், கோடைக்காலத்தில் கால்நடைகள் தாகம் தீர்க்க பயன்பாடாக உள்ளது. இந்நிலையில், கடந்த நாட்களில், அப்பகுதியை சேர்ந்த தனி நபர்கள் சிலர், இத்தாங்கல் நீர் பிடிப்பு பகுதி மற்றும் தாங்கலுக்கு வரும் நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து, தங்களுக்கு சொந்தமான நிலங்களோடு சமப்படுத்தி விவசாயம் செய்கின்றனர்.
இதனால், மழைக்காலத்தில் தாங்களுக்கு வரும் தண்ணீர் தடைபடுவதோடு, தாங்கல் நீர் பிடிப்பு பரப்பும் குறைந்துள்ளது.
எனவே, களியப்பேட்டை தாங்கல் பகுதியின் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.