சோழவந்தான்- -சோழவந்தான் ரயில்வே மேம்பால பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்பாலம் கட்ட 2016ல் ரூ. 45 கோடி நிதி ஒதுக்கி அன்றைய முதல்வர் ஜெ., அடிக்கல் நாட்டினார். மதுரை கோட்ட நெடுஞ்சாலைத் துறை கட்டுமான பிரிவு மூலம் ரூ.18 கோடியே 18 லட்சம் நிதியில் பணி ஆரம்பிக்கப்பட்டது. பின்பு சர்வீஸ் ரோட்டுக்காக நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பணிகளுக்காக கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டது. பாலம் கட்டும் காலக்கெடுவும் முடிந்தது.
இதையடுத்து மேம்பால பணிகளை தொடர பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தின. இதனால் 2020ல் ரூ. 19 கோடியே 76 லட்சம் நிதி ஒதுக்கி மறுடெண்டர் விடப்பட்டது. 2021 ஜன., மேம்பால பணி, அணுகுசாலை உள்ளிட்ட பணிகள் தொடங்கின. இதன்பிறகு நடந்த ஆட்சி மாற்றத்தால் பணிகளில் தொய்வு ஏற்பட, எம்.எல்.ஏ., வெங்கடேசன், கலெக்டர் அனிஷ்சேகர் கள ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினர். 2022 டிச., முதல் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
மேம்பால பகுதியிலும், சர்வீஸ் ரோடு பகுதியிலும் தார் ரோடு அமைக்கும் பணி கோட்ட செயற்பொறியாளர் பிரசன்ன வெங்கடேஷ், கட்டுமான பிரிவு செயற்பொறியாளர் சாருமதி ஆகியோரின் மேற்பார்வையில் நடக்கிறது. அடுத்த மாதம் பாலம் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.