விழுப்புரம், : நேரு யுவக்கேந்திராவில் தேசிய இளையோர் தொண்டராக சேவையாற்ற விண்ணப்பிக்கலாம்.
விழுப்புரம் மாவட்ட நேரு யுவக்கேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ராம்சந்திரன் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட நேரு யுவக்கேந்திரா அலுவலகத்தில் தேசிய இளையோர் படை திட்டத்தின் கீழ் தேசிய இளையோர் தொண்டராக சேவையாற்ற ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அளவிலும் தலா 2 ஆண்கள், பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேச கட்டமைப்பு பணிகளில் ஈடுபடுதல், ஆரோக்கியம், எழுத்தறிவு, சுகாதாரம் மற்றும் இதர சமூக பிரச்னைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல். அவசர காலங்களில் மத்திய, மாநில அரசு நிர்வாகங்களுக்கு துணைபுரிதல்.
அரசு திட்டங்களை நேரு யுவக்கேந்திரா மூலம் செயல்படுத்துதல். கிராமங்களில் இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்கள் ஆரம்பித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்தது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 29 வயதிற்குள் இருக்க வேண்டும். பட்டதாரிகள், கணினி தெரிந்தவர்கள், இளையோர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் என்.எஸ்.எஸ்., - என்.சி.சி., தன்னார்வலர்கள், பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் மதிப்பூதியமாக வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்டதிலிருந்து 2 ஆண்டுகள் மட்டுமே சேவையாற்றலாம். தகுதியுள்ளவர்கள் www.nyks.nic.in என்ற இணையதளத்தில் மேலும் விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 9ம் தேதி கடைசி நாளாகும். மேலும், விபரங்களுக்கு விழுப்புரம் பெருந்திட்ட வளாக நேரு யுவக்கேந்திரா மாவட்ட இளையோர் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.