காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாலை, விழுப்புரம், திருச்சி, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் மற்றும் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தினமும், ஆயிரக்கணக்கான பயணியர் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள மதுராந்தோட்டம் தெருவில், கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, வெளியேறிய கழிவு நீர் பயணியர் நடந்து செல்லும் இடத்தில் குட்டைபோல தேங்கி துர்நாற்றம் வீசியதால், அவ்வழியாக சென்றவர்கள் முகம் சுளித்தபடியே சென்றனர்.
இப்பகுதியில் அடிக்கடி கழிவு நீர் வெளியேறுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, கழிவு நீர் கால்வாயில் உள்ள அடைப்பை நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.