வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், சமீப காலமாக கஞ்சா விற்பனை, வழிப்பறி, அரிவாள் வெட்டு, கொலை போன்ற சம்பவங்களில், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரால் பிடிபட்ட பின், அதில் பலர் பள்ளி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, செங்கல்பட்டு பகுதி பிரிந்து தனி மாவட்டம் ஆனதால், காஞ்சிபுரம் மாவட்டம் சிறிய எல்லை கொண்ட மாவட்டமாக உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், தற்போது இரண்டு மகளிர் காவல் நிலையம் உட்பட 13 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கொலை, திருட்டு, கூட்டு பாலியல் பலாத்காரம் போன்ற பல்வேறு வகையான குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன. இருப்பினும், விரைவாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர்.
அதேபோல், கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகள் விற்பனை செய்வோர் மீதும், போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கின்றனர்.
அதிகாரிகள் கவலை
ஆனால், இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள், சமீபகாலமாக, 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் என்பதால், போலீசாரே ஆச்சரியப்படுகின்றனர். அதே சமயம், குழந்தைகள் நல அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரு ஆண்டுகளில், சிறுவர்கள் ஈடுபட்ட குற்றச் சம்பவங்களை பார்க்கும்போது, சிறுவர்களின் மனநிலை, அவர்களின் நட்பு வட்டாரம், போதைப்பொருள் பயன்பாடு போன்றவை அந்த சிறுவர்களை மோசமான நிலைக்கு கொண்டு சென்றது தெரிய வரும்.
காஞ்சிபுரத்தில், கடந்த டிசம்பர் மாதம், சாலையில் சென்ற ஏழு பேரை, சம்பந்தமே இல்லாமல் வெட்டிய வழக்கில் பிடிபட்ட நான்கு பேரில், மூன்று பேர் சிறுவர்கள். அதில் ஒரு பிளஸ் 1 மாணவரும் அடங்குவார்.
அதேபோல், நான்கு நாட்களுக்கு முன், புஞ்சையரசந்தாங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக பிடிபட்ட நான்கு பேரில், பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
கடந்த காலங்களில், பள்ளிக்கு செல்லாத, கூடா நட்பு கொண்ட சிறுவர்கள் இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், சமீப நாட்களாக, பள்ளியில் படிக்கும்போதே போதைப்பொருள் விற்பனை செய்கின்றனர்.

இதுகுறித்து காஞ்சி போலீசார் கூறியதாவது:
சிறுவர்கள் ஹீரோயிசம் செய்ய முயல்கின்றனர். சினிமாவும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. பள்ளியிலேயே இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தான் ஓரளவு தீர்வு கிடைக்கும்.
ஆனால், மாணவரை பார்த்து ஆசிரியர்கள் பயப்படுகின்றனர். சிறு வயதிலேயே குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது, போலீசார் தொடர் கண்காணிப்பில் இருப்பர்.
ஒரு முறை குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் பலருக்கு, குற்றவாளிகளின் தொடர்பு பெரிய அளவில் கிடைக்கிறது. சிறுவர்கள் என்பதால், தண்டனை கிடையாது என, நினைக்கின்றனர்.
ஆனால், குற்றம் நிரூபிக்கப்பட்டால், கட்டாயம் தண்டனை வழங்கப்படும். டிசம்பர் மாதம், சம்பந்தமே இல்லாமல், மூன்று சிறுவர்கள் உட்பட நான்கு பேர் சேர்ந்து, சாலையில் சென்ற ஏழு பேரை வெட்டினர். அவர்களின் குடும்பம் இன்று வரை சிரமப்பட்டு வருகிறது.
அதில் பலர், மூன்று மாதங்களாக வேலைக்கு செல்ல முடியாமல் உள்ளனர். இதெல்லாம் சிறுவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. சிறு வயதிலேயே நீதிக் கதைகளையும், ஒழுக்கத்தையும் போதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நடவடிக்கை இருக்காது
குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் சிறார்கள் பற்றி, குழந்தைகள் நல குழுமத்தினர் கூறியதாவது: குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் சிறுவர்கள், எதனால் அப்படி செய்தார்கள் என, பார்க்க வேண்டும். அவர்களுடைய சுற்றம், பெற்றோர், வளர்த்த விதம் போன்றவை குறித்து, நாம் பார்க்க வேண்டும்.
பள்ளியில் எப்படி செயல்படுகிறார்கள் என, ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் நடவடிக்கை சரியில்லை என்றால், ஆசிரியர் பள்ளி வாயிலாக, குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் சொல்லலாம்.
அவர்களை, காப்பகத்தில் சேர்த்து, நல்ல சூழலுக்கு ஆட்படுத்தி மீண்டும் அனுப்புவோம். அவ்வாறு, காப்பகத்தில் தங்க வைத்து அறிவுரை, ஒழுக்கம் போன்றவை குறித்து தெரிவித்த பிறகும், சிறுவர்களின் நடவடிக்கையில் மாற்றம் இல்லையெனில், அவர்களுக்கு சிகிச்சை தான் அளிக்க வேண்டும்.
சிறுவர்கள் என்பதால், கவுன்சிலிங் கொடுத்து தான் நல்வழிப்படுத்த வேண்டும். அவர்களுடைய வழியிலேயே சென்று, ஒழுக்கத்தை சொல்ல வேண்டும். இல்லையெனில் அவர்கள் வழியிலேயே தான் செல்வார்கள்.
சிறியவராக இருந்தாலும், பெரியவராக இருந்தாலும், அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என, சிறுவர்கள் உணர வேண்டும். சிறுவனாக இருந்தால் நடவடிக்கை இருக்காது என சிறுவர்கள் நினைக்கக்கூடாது.
சிறை கண்காணிப்பாளர் மற்றும் காப்பக வார்டன் ஆகியோருக்கும், அரசு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். சில காப்பகங்கள் மீதான நடவடிக்கையை நாங்கள் பார்க்கிறோம். எனவே, குழந்தைகளை எப்படி நடத்த வேண்டும் என, காப்பக வார்டன்களுக்கு சொல்ல வேண்டும்.
குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவனை, இந்த சமூகம் பயத்துடன் பார்க்கிறது. அந்த சிறுவன் எந்த சூழலில் அந்த சம்பவத்தை செய்தார் என பார்ப்பதில்லை. சிறுவர்களுக்கு நண்பர்களுடன் இருப்பதற்கான சூழல் உள்ளது. மீண்டும், மீண்டும் அந்த சூழலுக்குள்ளாகவே சென்றால், மீண்டும் தவறிழைக்க நேரிடும்.
அதுபோன்ற நட்பு வட்டாரத்திற்குள் செல்லாமல், சிறுவர்கள் தப்பிக்க முடியும். அரசு தான் சரியான ஊன்றுகோல்; சரியான கவுன்சிலிங் கொடுத்தால், சிறப்பான இந்தியாவை கொண்டு வர முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
குற்றச் சம்பவங்கள்
2021 ஜூன் - காஞ்சிபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்டதாக, ஐந்து பேர் கைது. இதில், இரண்டு சிறுவர்கள்l 2021 ஆகஸ்ட் - ஸ்ரீபெரும்புதுார் அருகே, புதுநல்லுாரில் மனநலம் பாதித்த பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்ததாக, 17 வயது சிறுவன் கைது
2022 செப்டம்பர் - காஞ்சி ஓரிக்கையில், கல்லுாரி மாணவனான அண்ணனை, குடிபோதையில் குத்திக்கொலை செய்த பிளஸ் 2 மாணவன் கைதுl 2022 டிசம்பர் - காஞ்சிபுரத்தில் சாலையில் சென்ற ஏழு பேரை வெட்டியதில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதில், மூன்று சிறுவர்கள்l 2023 பிப்ரவரி - புஞ்சையரசந்தாங்கல் பகுதியில் கஞ்சா விற்றதாக, நான்கு பேர் கைது. இதில், ஒரு பள்ளி மாணவன், ஒரு டிப்ளமா மாணவன்.