தங்கவயல்--கோலார் மாவட்டத்தில் உள்ள மூன்று தனி தொகுதிகளில், காங்கிரஸ் வசம் உள்ள பங்கார்பேட்டை தொகுதியை மீண்டும் காங்கிரஸ் தக்க வைத்துக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இத்தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமிக்கு எதிராக பா.ஜ., - ம.ஜ.த., மட்டுமல்லகாங்கிரசிலும் கூட அதிருப்தி அலை உள்ளது.
மைசூர் ராஜ்ஜியம் என்று இருந்தபோது 1952ல் முதல் சட்டசபை இயங்கியபோது பேத்தமங்களா தொகுதியின் கேசம்பள்ளி கிராமத்தை சேர்ந்த கே.சி. ரெட்டி முதல் முதலமைச்சராக பதவி வகித்தார்.
கடந்த 1972 வரை, பேத்தமங்களா பொதுத் தொகுதியாகவே இருந்தது. 1977ல் எஸ்.சி., தனி தொகுதியாக மாற்றப்பட்டது. 2008ல் பேத்தமங்களா தொகுதியின் பெயர், பங்கார்பேட்டை என மாற்றம் செய்யப்பட்டது. பங்கார்பேட்டையில் 'போவி' எனும் எஸ்.சி., வகுப்பினர் பெரும்பான்மையாக உள்ளனர். அத்துடன் ஆதிஆந்திரா எனும் அருந்ததியர், ஆதிகர்நாடகா, ஆதிதிராவிடர் ஆகிய எஸ்.சி., ஜாதியினரும் கணிசமாக வசித்து வருகின்றனர்.
போவி சமுதாயத்தைச் சேர்ந்த எம். நாராயணசாமி, ஜனதாவில் ஒருமுறை காங்கிரசில் இருமுறை என மூன்று முறை எம்.எல்.ஏ., ஆனார்.2023 தேர்தலில் பா.ஜ.,வில் போட்டியிட சீட் கேட்டு வருகிறார். பா.ஜ.,வின் வெங்கட் முனி 2008ல் எம்.எல்.ஏ.,வாக இருந்தார். இவரது மகன் மகேஷ்பாபுவும் பா.ஜ.,வில் சீட் கேட்டு வருகிறார்.
இங்கு 2013, 2018ல் இருமுறையும் காங்கிரசின் எஸ்.என். நாராயணசாமியே எம்.எல்.ஏ.,வாக இருந்து வருகிறார். இவரும் கூட போவி சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர்காங்கிரசின் முன்னாள் எம்.பி., முனியப்பாவின் எதிர்ப்பாளர்களுடன் இருந்து வருவதால், 2019 லோக்சபா தேர்தலில் பங்கார்பேட்டை தொகுதியில் காங்கிரசின் முனியப்பாவுக்கு குறைவான ஓட்டுகளே கிடைத்தது. இதனால் நாராயணசாமி மீது முனியப்பா கடும் கோபத்தில் இருந்து வருகிறார்.
சட்டசபைத் தேர்தல்களில் பலரை வீழ்த்துவதில் அசுரராக விளங்கிய முனியப்பா,தன் வெற்றியை தடுத்த பங்கார்பேட்டை காரரை எளிதில் விடுவதாக இல்லையென காத்திருக்கிறார். இதனால், முனியப்பாவின் ஆதரவாளரான ராமசந்திரப்பா என்பவருக்கு காங்கிரசில் சீட் வாங்கி தர முயற்சி நடந்துவருகிறது.
பங்கார்பேட்டை தொகுதியில் எஸ்.என். நாராயணசாமி மீது அதிருப்தி வலுத்து வருகிறது. அவருக்கு மீண்டும் சீட் வழங்கினால் காங்கிரஸ் ஒரு இடத்தை இழக்க நேரிடும் என்பதை தெரியப்படுத்தியுள்ளனர்.
ராமசந்திரப்பாவுக்கு சீட் கிடைக்காமல் போனால், போட்டி வேட்பாளராக களம் இறங்குவதாக ராமசந்திரப்பா தெரிவித்து வருகிறார். அப்படி ராமசந்திரப்பாவும் போட்டியிட்டால், நாராயணசாமியின் வெற்றி பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ம.ஜ.த., வேட்பாளர் மல்லேஸ் பாபுவுக்கு ஏற்கனவே மக்கள் செல்வாக்கு கூடி வருவதாக தெரியவருகிறது. எனவே, சட்டசபைத் தேர்தலில் முனியப்பாவின் ஆடு புலி ஆட்டம் மறைமுகமாக நடந்து வருகிறது. இவர் மல்லேஸ் பாபுவுக்கு சாதகமாக செயல்படலாம் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
எனவே, எஸ்.என். நாராயணசாமி உட்கட்சி, எதிர்க்கட்சிகள் என பலமுனை எதிர்ப்புகளை சந்திக்க வேண்டும்.