மாண்டியா சுயேச்சை எம்.பி.,யான நடிகை சுமலதா, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், பா.ஜ.,வில் இணைய வாய்ப்புள்ளது.
இம்முறை சட்டசபை தேர்தலில், பழைய மைசூரு பகுதி தொகுதிகளில், பா.ஜ., கண் வைத்துள்ளது. அடுத்தடுத்து பொதுக்கூட்டம் நடத்துகிறது.
வேறு கட்சிகளின் தலைவர்களை ஈர்க்க முயற்சி நடக்கிறது. இதில் பெரும்பாலும் வெற்றியும் அடைந்துள்ளது.
மாண்டியா சுயேச்சை எம்.பி., சுமலதா அம்பரீஷும், பா.ஜ.,வில் இணைய ஆர்வம் காண்பிக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாண்டியாவுக்கு வந்திருந்த போதே, சுமலதா பா.ஜ.,வில் இணைவார் என, எதிர்பார்க்கப்பட்டது.
அமித் ஷாவுக்கு வரவேற்பு அளித்து வைத்த பிளக்ஸ்களில், சுமலதாவின்போட்டோவும் இடம் பெற்றிருந்தது. ஆனால், பா.ஜ.,வில் இணைவது நடக்கவில்லை.
இந்நிலையில், மார்ச் 11ல், பிரதமர் நரேந்திர மோடி, மாண்டியாவுக்கு வருகை தருகிறார். மைசூரு - பெங்களூரு நெடுஞ்சாலையை திறந்து வைக்கிறார். பிடதியில் இருந்து, மாண்டியாவின் மத்துார் வரை பேரணியும் நடத்த உள்ளார்.
பேரணி முடிந்த பின், கெஜ்ஜலகெரே காலனி அருகில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யவும் பா.ஜ., மாநில தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். அப்போது, பிரதமரின் முன்னிலையில், சுமலதா அம்பரீஷ், பா.ஜ.,வில் இணைய வாய்ப்புள்ளது.
- நமது நிருபர் -