திண்டிவனம் : நண்பரின் வீட்டில் திருடிய கல்லுாரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அய்யனாரப்பன் 47; இவரது மகன் அய்யப்பன் 18; திண்டிவனம் அரசு கல்லுாரியில் படித்து வருகிறார்.அதே கல்லுாரியில் படித்து வருபவர் வானுார் அடுத்த டி.பரங்கனி பகுதியைச் சேர்ந்த ராஜி மகன் கவுதம் 22; இருவரும் நண்பர்கள்.
இந்நிலையில் அய்யனாரப்பன் அவரது மகள் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த நகைகள் கடந்த ஜனவரி மாதம் திருடு போனது. இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நகைகள் திருடுபோனது முதல் அடிக்கடி அய்யப்பனை தேடி வீட்டிற்கு வந்த கவுதம் சமீப காலமாக வராதது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.அதன்பேரில் கவுதமிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து கவுதமை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 26 கிராம் நகைகளை பறிமுதல் செய்தனர்.