ஜவுளி சந்தைகளுக்கு விடுமுறை
காய்கறி மார்க்கெட் செயல்படும்
ஈரோடு: இடைத்தேர்தலையொட்டி தொகுதியில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. திங்கள் காலை வழக்கமாக அசோகபுரத்தில் ஜவுளி சந்தை நடக்கும். அதுபோல் சென்ட்ரல் தியேட்டர் ஜவுளி சந்தை இரவில் நடக்கும். ஓட்டுப்பதிவால் இவ்விரு சந்தைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கனி (ஜவுளி) மார்க்கெட்டில், தினசரி கடைகள் வழக்கம் போல் செயல்படும். வ.உ.சி., பூங்கா நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் இன்று வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்ம குமாரிகள்
அமைதி ஊர்வலம்
கோபி: சிவ ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் சார்பில், கோபியில் அமைதி ஊர்வலம் நேற்று நடந்தது. ஆடிட்டர் பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை வகித்தார். சரவணா தியேட்டர் சாலை, தேர்வீதி, கடைவீதி உள்ளிட்ட வீதிகளில் ஊர்வலம் சென்றனர். தவிர கோபியில் பல்வேறு இடங்களில், கொடியேற்று விழா நடந்தது.
கொடிவேரி தடுப்பணையில்
குவிந்த சுற்றுலா பயணிகள்
கோபி: பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் வெளியேறுகிறது. கொட்டும் அருவியில் குளிக்கும் வசதி எளிது என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். வார விடுமுறை நாள் என்பதால், நேற்று பயணிகள் எண்ணிக்கை
அதிகரித்தது. அருவியில் குளித்து மகிழ்ந்தனர். பின் அங்குள்ள சிறுவர் பூங்காவில் பொழுதை கழித்தனர்.
மீன் மார்க்கெட்டில் கூட்டம்
சாலையில் நின்ற வாகனங்கள்
ஈரோடு: ஈரோட்டில் மீன் மார்க்கெட்டில் குவிந்த வாடிக்கையாளர்களால், காவிரி சாலையை
டூவீலர்கள் ஆக்கிரமித்தன.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சாலையில் மீன் மார்க்கெட் செயல்படுகிறது. ஞாயிறு கிழமைகளில் மீன் வாங்க அதிகளவில் கூட்டம் கூடும். மீன் வாங்க வருவோர் சாலையிலேயே வாகனத்தை நிறுத்தி செல்வது வழக்கம். சில வாரங்களாக ஞாயிற்றுகிழமைகளில் மார்க்கெட்டில் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
பிரசாரம் ஓய்ந்து இயல்பு நிலை திரும்பிய நிலையில், மீண்டும் மீன் வாங்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வழக்கம்போல் நேற்று மீன் வாங்க வந்தவர்கள், டூவீலர்களை சாலையோரத்திலும், சாலையிலும் நிறுத்தி சென்றதால், போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டது.
குடும்ப பிரச்னை: ரயில்வே
தொழிலாளி விபரீத முடிவு
ஈரோடு: குடும்ப பிரச்னையால், திருமணமான இரண்டரை மாதத்தில், ரயில்வே தொழிலாளி, தற்கொலை செய்து கொண்டார்.
டில்லியை அடுத்த ஆக்ராவை சேர்ந்தவர் வாஸ்கோ, 34; பாசஞ்சர் ரயிலில் கார்டாக பணியாற்றி வந்தார். ஈரோட்டில் ரயில்வே காலனியில் வசித்தார். நேற்று முன்தினம் இரவு ஈரோடு பிளாட்பார்ம் எண்-2ல் திருப்பூர் மார்க்கமாக செல்லும் ரயில் முன் பாய்ந்தார். உடல் சிதறி பலியானார். ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். கடந்த நவ., மாதம் தான் திருமணம் நடந்தது. குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று, போலீசார் தெரிவித்தனர்.
முத்துாரில் நாளை இலவச
வெறிநோய் தடுப்பூசி முகாம்
காங்கேயம்: வெள்ளகோவில், முத்துார் பேரூராட்சியை அடுத்த சின்னமுத்துாரில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், வளர்ப்பு நாய்களுக்கு இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம், நாளை நடக்கிறது. சின்னமுத்துார் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம் அருகில், காலை, 9:00 மணி நடக்கிறது.
முகாமில் வெறிநோய்க்கான அறிகுறி
பற்றிய விளக்கம், செல்ல பிராணி வளர்ப்போர்க்கு ஆலோசனை வழங்கப்படும்.
அத்துடன் இறைச்சி கடைகளில் பின்பற்ற வேண்டிய குறிப்பு, கால்நடை மற்றும் செல்லப்பிராணிகளை ஏற்றி செல்லும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை பற்றியும் விளக்கம் அளிக்கப்படுவதாக, மேட்டுபாளையம் கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
கும்பாபிஷேக விழா
தீர்த்தக்குட ஊர்வலம்
புன்செய்புளியம்பட்டி: கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, தீர்த்தக்குடம் எடுத்து, அம்மை அழைப்பு நடந்தது.
புன்செய்புளியம்பட்டி அருகே டாணாபுதுார் முத்து மாரியம்மன் கோவிலில் மார்ச், 3ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. நேற்று காலை பவானிஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து அம்மன் அழைப்பு நடந்தது. ஊத்துக்குளி அம்மன் கோவிலில் இருந்து துவங்கிய ஊர்வலம் நம்பியூர் சாலை, கோவை சாலை வழியாக சென்றது.
திரளான பெண்கள் வேப்பிலையுடன் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். கோவிலை சென்றடைந்தும் தீர்த்தக்குடத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.
1,200 கிலோ ரேஷன் அரிசி
பறிமுதல்
ஈரோடு, பிப். 27-
தமிழக-கர்நாடகா எல்லையான பர்கூர்மலை செக்போஸ்டில், ஈரோடு மாவட்ட குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், நேற்று மதியம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது வந்த ஒரு சரக்கு ஆட்டோவில், 30 மூட்டைகளில், 1,200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. கர்நாடாகாவில் அதிக விலைக்கு விற்க கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
ரேஷன் அரிசி, சரக்கு ஆட்டோவை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ரவி, 38, கஜேந்திரா, 25, ஆகியோரை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி இருவரையும் ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
விபத்தில் காயம்; அமைச்சர் ஆறுதல்
காங்கேயம், பிப். 27-
காங்கேயம் அருகே, வாலிபனங்காடு பஸ் நிறுத்தம் அருகில், லாரியும், வேனும் நேற்று மோதிக்கொண்ட விபத்தில், நான்கு பேர் பலியாகினர். அதேசமயம், ௨௦க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்கள் காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இவர்களை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சந்தித்து, ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.
பின் திருப்பூர், ஈரோடு, கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கவும் அமைச்சர் உத்தரவிட்டார்.
இலவச மருத்துவ முகாம்
தாராபுரம், பிப். 2௭-
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் அரிமா சங்கம் சார்பில், ரத்ததான முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம், தாராபுரத்தில் நேற்று நடந்தது. முகாமில், 40க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.
மருத்துவ முகாமில், 200க்கும் மேற்பட்டோர் பல்வேறு நோய்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றனர். சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், ஈஸ்வரமூர்த்தி, வட்டக்கிளை செயலாளர் நவீன் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சாலையோரத்தில் கிடந்த ஆண் உடல்
கோபி, பிப். 27-
கோபி அருகே சாலையோரத்தில் கிடந்த ஆண் உடலை போலீசார் மீட்டனர்.
கோபி அருகே பிள்ளையார்கோவில் வீதியில், சாலையோரத்தில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக, கோபி போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதில் இறந்து கிடந்தவர், திருப்பூர் அருகே அய்யன் நகரை சேர்ந்த ஆறுமுகம், 50, என தெரிந்தது. கோபிக்கு வந்த அவரின் உறவினர்களிடம் உடலை போலீசார் ஒப்படைத்தனர்.