நாமக்கல்: 'முட்டை கொள்முதல் விலை உயர வாய்ப்புள்ளதால், 30 காசுக்கு மேல் குறைத்து விற்பனை செய்ய வேண்டாம்' என, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்), நாமக்கல் மண்டல துணை தலைவர்
சிங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
இன்று (நேற்று) ஐதராபாத் மண்டலத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது. நாளையும் (இன்று) விலை உயர வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பர்வாலா மார்க்கெட்டிலும், முட்டை விற்பனை நன்றாக உள்ளதால், அங்கும் விலை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
நாமக்கல் மண்டலத்தில், 15 நாட்களாக, 'மைனஸ்' நிலையாக இருப்பதற்கு, பண்ணையாளர் மற்றும் வியாபாரிகளின் ஒத்துழைப்பே காரணம். இதேபோல் வரும் காலங்களிலும் நிலையான, 'மைனஸ்' விலை அல்லது அறிவிக்கப்படும் முட்டை விற்பனை விலை தொடர, ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மற்ற மண்டலங்களின் சந்தை நிலவரத்தை ஆராய்ந்து, வரும் நாட்களில் விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதேசமயம் பண்ணையாளர்கள், 30 காசுக்கு மேல் குறைத்து விற்க வேண்டாம். வியாபாரிகளும், 30 காசு, 'மைனசுக்கு' மேல் கேட்க வேண்டாம். யாராவது அதிக 'மைனஸ்' கேட்டால், அந்தந்த வட்டார குழு தலைவரிடம் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.