வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு போன்ற முக்கிய தேர்வுகளையே முறையாக கையாளத் தெரியாத நிர்வாகத் திறனற்ற திமுக அரசை வன்மையாக கண்டிப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த பிப்.,25ல் டி.என்.பி.எஸ்.சி 'குரூப்-2' பிரதான தேர்வு நடைபெற்றது. இதில் காலையில் நடந்த தமிழ் தகுதித்தாள் தேர்வுக்கு, பல தேர்வு மையங்களில் விடைத்தாள்கள் வர தாமதமானதாகவும், தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படம் மற்றும் பதிவெண்ணுடன் கூடிய ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த குழப்பத்தால் சில இடங்களில் செல்போன், புத்தகங்களை பார்த்து சிலர் தேர்வெழுதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக பல அரசியல் கட்சிகள் தேர்வை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வகையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (பிப்.,25) நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததன் காரணமாக பல்வேறு குளறுபடிகளுடன் தாமதமாக துவங்கியுள்ளன. இதனால் பல முறைகேடுகள் நடந்துள்ளது.

அதன் காரணமாக தகுதிவாய்ந்த தேர்வர்கள் தங்கள் வாய்ப்பினை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு போன்ற முக்கிய தேர்வுகளையே முறையாக கையாளத் தெரியாத இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசை வன்மையாக கண்டிப்பதுடன், உடனடியாக அந்த தேர்வை ரத்து செய்து, வேறு ஒருநாளில், உரிய முறையில் மறுதேர்வினை நடத்திட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.