தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
சங்கரன்கோவிலில், கோமதியம்மன் கோவில் அருகே, தி.க., பொதுக்கூட்டத்திற்கு
அனுமதி மறுக்க வேண்டும் என, ஹிந்து முன்னணி மற்றும் சமூக சேவகர்கள்
கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அக்கூட்டம் திட்டமிடப்படி நடந்துள்ளது.
இதற்காக அமைதியாக போராடிய ஹிந்து முன்னணியினர் மீது, போலீஸ் துறை கடும்
தாக்குதல் நடத்தி உள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தி, மத நல்லிணக்கத்திற்கு
ஊறுவிளைவிக்கும் கூட்டத்திற்கு, பாதுகாப்போடு அனுமதி கொடுத்தது மத விரோத
செயல்.
* 'ஹிந்து மதத்துக்கு எதிராக நடப்பதே, மதச்சார்பின்மை'
என்பது, 'திராவிட மாடல்' ஆட்சியினர் புத்தியில் தவறாக பதிந்து விட்டது
நன்றாகவே தெரிகிறது!
***
விழுப்புரம் தொகுதி வி.சி., கட்சி - எம்.பி., ரவிக்குமார் பேட்டி: புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், பல ஆய்வாளர்கள் உருவாக காரணமாக இருந்துள்ளது. இதில், பேராசிரியர்கள் பலர் பணியாற்றினர். தற்போது பேராசிரியர், இயக்குனர் இல்லாமல் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமி, தமிழ் மீது பற்று கொண்டவர். தமிழுக்காக போராட்ட களத்தில் இருந்தவர். அவரது ஆட்சிக் காலத்தில், இந்த நிறுவனம் மூடப்பட்டது என்ற அவப்பெயர் வரக்கூடாது.
* ரங்கசாமி, இவங்களுக்கு ஆகாத பா.ஜ., கூட்டணியில் இருக்காரு... கடும் கண்டனம் தெரிவிக்காம, அவரது புகழ் பாடுவதை பார்த்தால், எங்கேயோ இடிக்குதே!
----------
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: என்.எல்.சி., சுரங்கத்திற்கு நிலம் எடுக்க, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்வது அரசின் கடமை. ஆனால், பா.ம.க.,வினரையும், பொதுமக்களையும் மனு கொடுக்க அனுமதிக்காமல் கைது செய்தது அடக்குமுறை. அதிகாரத்தையும், அடக்குமுறையையும் பயன்படுத்தி நிலங்களை பறிக்கலாம் என, என்.எல்.சி.,யும், கடலுார் மாவட்ட நிர்வாகமும் நினைத்தால், அதை மக்கள் முறியடிப்பர்.
* 'தமிழைத் தேடி' பயணம் போயிட்டு வந்ததும், அடுத்த போராட்ட களம் தயாரா இருக்குது போல!
--------
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை அறிக்கை: கொரோனா நேரத்தில், அரசுக்கு உறுதுணையாக இருந்த அரசு டாக்டர்களின் கோரிக்கைகள் எதையுமே, முதல்வர் ஸ்டாலின் இன்னும் நிறைவேற்றவில்லை. எங்களின் சேவையை அங்கீகரிக்க மறுத்து, வரலாற்று பிழையை முதல்வர் செய்து வருகிறார். மருத்துவ துறையின் இதயமாக உள்ள மருத்துவர்களின் மீது, முதல்வரின் கடைக்கண் பார்வை விழாதது வருத்தமளிக்கிறது.
* இப்போதைக்கு முதல்வரின் கடைக்கண் பார்வை, ஈரோடு இடைத்தேர்தல் முடிவின் மீதும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் மீதும் மட்டுமே உள்ளது!