ஹாவேரி-ஆன்லைனில் சூதாடுவதற்காக, தான் வேலை செய்த வங்கியில், 2.40 கோடி ரூபாய், 'ஆட்டை' போட்ட உதவி மேலாளர் கைது செய்யப்பட்டார்.
ஹாவேரி டவுனில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி உள்ளது. இங்கு வீரேஷ் காசிமத், 28, என்பவர் உதவி மேலாளராக வேலை செய்தார்.
2022, ஆகஸ்ட் 20ம் தேதி முதல், கடந்த 7ம் தேதி வரை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து, 2.40 கோடி ரூபாயை, தன் நண்பரான மகாந்தய்யா ஹிரேமத் என்பவரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றினார்.
இந்த பணத்தில், ஆன்லைனில் சூதாட்டம் விளையாடினார். இதில், 2.40 கோடி ரூபாயையும் இழந்தார். இதற்கிடையில், சில வாடிக்கையாளர்களுக்கு தங்களது வங்கிக் கணக்கில் இருந்து பணம் குறைந்தது தெரியவந்தது.
இது குறித்து, அவர்கள் வங்கி மேலாளர் தேவதர் லண்டேவிடம் கூறினர். சுதாரித்து கொண்ட அவர், வங்கியின் கணக்குகளை ஆய்வு செய்தார்.
வாடிக்கையாளர்களின் பணம் 2.40 கோடி ரூபாயை, வீரேஷ் 'ஆட்டை' போட்டது தெரிந்தது.
அவரது புகாரின்படி, ஹாவேரி போலீசார், நேற்று முன்தினம் வீரேஷை கைது செய்தனர்.
அவரது நண்பர் மகாந்தயாவுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.