உடுமலை;பகலில் அதிக வெயில் நிலவுவதால், கால்நடைகளுக்கு, முறையாக தண்ணீர் அளிக்க கால்நடை விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் பால் உற்பத்திக்காக கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:
கால்நடைகளுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்கக்கூடாது. அவற்றின் உடம்பில் பல உறுப்புகள் இயங்குவதால், அதன் வாயிலாக, வெளிப்படும் கழிவுப்பொருட்கள் தோல், சிறுநீரகம், நுரையீரல் வழியாக திரவ நிலையிலேயே வெளியாகும்.
எனவே, அதன் உடலில் வெப்பநிலை சீராக இருக்க தண்ணீர் அவசியம்.
கால்நடைகளின் தண்ணீர் தேவையை எந்த நேரத்திலும் பூர்த்தி செய்ய வேண்டும். தண்ணீர் குடிக்கும் அளவு குறையும் போது செரிமானத் தன்மை சத்துகளை உட்கிரகித்தல், கழிவுப் பொருட்களை வெளியேற்றுதல் போன்ற செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், கறவை மாடுகளுக்கு நான்கு அல்லது ஐந்து முறை தண்ணீர் அளிக்க வேண்டும்.
இவ்வாறு, கால்நடை டாக்டர்கள் கூறினர்.