திருப்பூர்:கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு, கையில் பெட்ரோல் கேனுடன், மூதாட்டி, தனது மருமகளுடன் வந்தார். திடீரென பாட்டிலை திறந்து, இருவரும் தங்கள் உடலில் பெட்ரோல் ஊற்ற முயன்றனர். போலீசார், வேகமாக ஓடிச் சென்று, கேனை பறித்தனர். அவர்கள், தேனி மாவட்டம், பழனிசெட்டி பட்டியை சேர்ந்த பரமேஸ்வரி, 66, இவரது மருமகள் கற்பகவள்ளி என்பது தெரிந்தது.
பரமேஸ்வரி கூறுகையில், ''எனது கணவர் காமாட்சி, 17 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். நான்கு மகன்; 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் ராமதாஸ், திருப்பூர் மாவட்டம், உடுமலையில், கடந்த 2021ல் உயிரிழந்துவிட்டார். இரண்டாவது மகன் ஆண்டவருடன் வசிக்கிறேன். மூத்த மகன் ராமதாஸ், உடுமலையில் பைனான்ஸ் தொழில் செய்துவத்தார். இதற்காக, எனது கணவனின் பூர்வீக சொத்துக்களை விற்று, 50 லட்சம் ரூபாய் கொடுத்தேன்.
அந்த பணத்தில் தொழில் செய்து, உடுமலையில் மகன் ராமதாஸ் சொத்துக்கள் வாங்கியுள்ளார். மகன் இறந்துவிட்டநிலையில், மருமகள் புவனேஸ்வரி, பேரன் பிரேம்குமார் ஆகியோர், நேரடி வாரிசான என்னை மறைத்து, தங்கள் பெயரில் சொத்துக்களை மாற்ற முயற்சிக்கின்றனர். உடுமலை ஆர்.டி.ஓ.,விடம் மனு செய்து, மோசடியாக பெறப்பட்ட வாரிசு சான்றை ரத்துசெய்து, எனது பெயரையும் சேர்த்து சான்று பெற்றுக்கொண்டேன். மகன் ராமதாஸின் சொத்தில், எனக்குரிய பங்கை பெற்றுத்தரவேண்டும்'' என்றார். இருவருக்கும் அறிவுரை கூறிய போலீசார், மூதாட்டி கொண்டுவந்த மனுவை, பதிவு செய்து, அதிகாரிகளிடம் வழங்குமாறு அனுப்பி வைத்தனர்.
நேற்று, பெண்களின் கையிலிருந்து, பெட்ரோல் கேனை பறிக்க போலீசார் படாதபாடு பட்டனர். வேகமாக பறித்ததில், பெட்ரோல் சிதறி, சில துளி, அருகிலிருந்த போலீசாரின் கண்ணுக்குள் விழுந்துவிட்டது.
இதனால், வேதனையுடன், நீண்டநேரம் அந்த போலீசார், கண்ணை துடைத்து கொண்டிருந்தார். தற்கொலை எந்த பிரச்னைக்கும் தீர்வல்ல என்பதை, ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.