சென்னை: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், முதல் முறையாக ஏழை தொழிலாளிக்கு, 35 லட்சம் ரூபாய் செலவில், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி ஈரோடை சேர்ந்த கூலித்தொழிலாளி மணி, 51, என்பவருக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சைக்கு பின், பூரண குணமடைந்த அவரை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்ரமணியன் சந்தித்து நேற்று நலம் விசாரித்தார்.
அவர் அளித்த பேட்டி:
சென்னை ராஜிவ்காந்தி, ஸ்டான்லி, மதுரை, கோவை, எழும்பூர் குழந்தைகள் நலம் ஆகிய ஐந்து மருத்துவமனைகள், குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையும் இணைந்து, கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கான ஒப்பந்தம், 2022 மார்ச் 2ல் கையெழுத்தானது.
அதன்படி, 4 கோடி ரூபாய் செலவில், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான அரங்கம் அமைக்கப்பட்டன.
அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, அறுவை சிகிச்சை அரங்கத்தில் பொருத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து, ரேலா மருத்துவமனையின் தலைவர் முகமது ரேலாவுடன் இணைந்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் இரைப்பை, குடல், கல்லீரல் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் நாகநாத்பாபு, கல்லீரல் மருத்துவத்துறைத் தலைவர் பிரேம்குமார், மயக்கவியல் துறைத் தலைவர் முருகன், மயக்கவியல் துறை டாக்டர் வெல்லங்கிரி அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர்.
ராஜிவ்காந்தி மருத்துவமனையில் இத்துறை துவங்கப்பட்டு 50 ஆண்டுகளில், முதன்முறையாக, வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில், இச்சிகிச்சைக்கு, 30 முதல் 35 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்டான்லி, ராஜிவ்காந்தி மருத்துவமனையை தொடர்ந்து, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையிலும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.
கடந்த 2008ல் துவங்கப்பட்ட முதல்வர் மருத்துவ காப்பீடு திட்ட செயல்பாடுகளில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது. காப்பீடு திட்டத்தில், 1,505 கல்லீரல் மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
மேலும் 1.42 கோடி குடும்பங்கள் பயன்பெறுகின்றன. ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு தொகை வாயிலாக பயனளித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.