திருப்பூர்:கொடுவாயில் செயல்பட்டு வந்த சுகம் மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர்களிடம், விசாரணை நடத்திய மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள், உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதை கண்டறிந்து, கடந்த, பிப்., 24 ம் தேதி மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.
அதன் உரிமையாளர் பிளஸ்சி என்பவரை, மருத்துவத்துறை இணை இயக்குனர் கனகராணி முன் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் வழங்கப்பட்டது. நேற்று பெரிச்சிபாளையத்தில் உள்ள மருத்துவத்துறை இணை இயக்குனர் அலுவலகத்துக்கு, விசாரணைக்கு வந்த பிளஸ்சி மருத்துவமனை நடத்துவதற்கான சான்றிதழ், ஆவணங்கள், மருத்துவ படிப்புக்கான சான்றிதழ் கொண்டு வரவில்லை.
இதனால், அவரை கடிந்து கொண்ட இணை இயக்குனர், நாளை (இன்று) மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டார். விசாரணைக்குழுவினர் கூறுகையில், 'துவக்கத்தில் சொந்த ஊர் திருநெல்வேலி எனக்கூறிய பெண், சான்றிதழ்கள் கேரள மாநிலம் மூணாறில் இருப்பதாக தெரிவித்தார். இதனால், நாளை (இன்று) மீண்டும் விசாரணைக்கு வரும்படி தெரிவித்துள்ளோம்,' என்றனர்.