கண்ணமங்கலம்-படவேடு கிராமத்தில், 'யு டியூப்' சமூக வலைதள சேனலுக்காக, 'வீடியோ' எடுத்த இருவர் ஆற்றில் மூழ்கி பலியாகினர்.
சென்னை, கீழ்கட்டளையைச் சேர்ந்த பிரகலாதன், 35, நங்கநல்லுாரைச் சேர்ந்த ஸ்ரீவர்ஷன், 38, உள்ளிட்ட எட்டு பேர், 'யு டியூப்' சேனலில் வீடியோ பிரசுரித்து வருகின்றனர்.
கடந்த, 26ல் திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை அடிவாரத்திலுள்ள படவேடு கிராமத்திற்கு இவர்கள் வந்தனர். அங்குள்ள கோவில் மற்றும் இயற்கை சூழல்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
நேற்று முன்தினம் மாலை, அங்குள்ள கமண்டல நதி அருகே அமர்ந்திருந்த போது, பிரகலாதன் கை கழுவ ஆற்றில் இறங்கினார். திடீரென வழுக்கி ஆற்றில் விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற ஸ்ரீவர்ஷனும் தடுமாறி ஆற்றில் விழுந்தார்.
இருவரையும் காப்பாற்ற மற்ற நண்பர்கள்முயன்றும் முடியவில்லை. தகவலின்படி வந்த, போளூர் தீயணைப்புத் துறையினர், நீண்ட தேடுதலுக்கு பின், இருவரையும் சடலமாக மீட்டனர். சந்தவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.