பொள்ளாச்சி:பொள்ளாச்சி மரப்பேட்டை பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தார்.
நகர பா.ஜ., தலைவர் பரமகுரு மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி நகராட்சி, 31வது வார்டு மரப்பேட்டையில் கழிவுநீர் ஓடை மீது கட்டப்பட்ட பாலம், தன்னாசியப்பன் கோவில் வீதி, முகமது நகர், சுண்ணாம்பு கால்வாய் இட்டேரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வழியாகும். கடந்த, 50 ஆண்டுக்கு மேலான பராமரிப்பின்றி உள்ள இந்த பாலத்தை புதுப்பிக்க வேண்டும்.
இப்பகுதியில், ரோட்டோரங்களில் குப்பை அதிகளவு குவிந்து கிடப்பதால் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இங்குள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் இல்லாததால், திறமையை மேம்படுத்த முடிவதில்லை. இங்கு,கடந்த, 11 ஆண்டுகளாக உப்பு தண்ணீர் குழாய்கள் இருந்தும், தண்ணீர் வரவில்லை. குடிநீர் குழாய்கள் சேதமடைந்தும் சீரமைக்கப்படாமல் உள்ளது.
சுண்ணாம்பு கால்வாய் இட்டேரி, தன்னாசியப்பன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக முடியவில்லை. தன்னாசியப்பன் கோவில் வீதியில் சாக்கடைகள் முறையாக துார்வாரப்படாமல் உள்ளது.
மரப்பேட்டை கிழக்கு பள்ளத்தில் பொது கழிப்பிட வசதியில்லாததால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ., மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் வனிதா கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆனைமலை தாலுகாவாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு, மகளிருக்கு ஏற்படும் குடும்ப மற்றும் சமுதாய அநீதிகளுக்கும், அடக்கு முறைகள் குறித்தும் புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனை நம்பி உள்ளனர். இங்கு மகளிர் ஸ்டேஷன் இல்லாததால், இங்குள்ள பெண்கள் புகார் கொடுக்க பொள்ளாச்சி மகளிர் ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டியுள்ளது.
இதனால், வீண் அலைச்சல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஆனைமலையில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் துவங்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.