தொண்டாமுத்துார்:அனைத்து இந்தியர்களும், காஷ்மீரி பண்டிட்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அவலங்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் இருந்து புலம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்கள் ஒன்றிணைந்து, 'உலக காஷ்மீரி பண்டிட் புலம்பெயர்ந்தோர் கூட்டமைப்பை' துவக்கியுள்ளனர். காஷ்மீர் பண்டிட்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறையை உலகுக்கு எடுத்துச் சொல்வது இந்த அமைப்பின் நோக்கம்.
இந்த அமைப்பின் மாநாடு புதுடெல்லியில், கடந்த, 25ம் தேதி நடந்தது. மாநாட்டில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
உலக அளவில் காஷ்மீரி பண்டிட்கள் மீதான கருத்துருவாக்கத்தை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம்.
குறைந்தபட்சம் இந்தியாவில் வாழும் அனைவரும், காஷ்மீரி பண்டிட்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அவலங்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
தனி நபராகவும், குடும்பமாகவும் நீங்கள் சந்தித்த வலிகளை, குறும்படங்களாக தயாரித்து வெளியிட வேண்டும். இதற்கு திரையரங்குகள் தேவையில்லை. நம் அனைவரிடமும் மொபைல் போன்களும், கம்ப்யூட்டர்களும் உள்ளன. இந்த தொழில்நுட்பங்களே போதுமானது.
தென்னிந்தியாவில் நீங்கள் 'காஷ்மீர் தினம்' என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து தருகிறோம்.
அந்நிகழ்ச்சி மூலம் உங்களுடைய கலை, இலக்கியம், இசை என, அனைத்தையும் பிற மக்கள் அறிந்து கொள்ளட்டும். உங்களுடைய கதைகள் வலிகளுடன் மட்டும் நின்று விடாமல், காஷ்மீர் கலாசாரத்தின் அழகையும், உங்களுக்குள் இருக்கும் துடிப்பான அதிர்வுகளையும் வெளிப்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.