திருத்தணி : திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் ஊராட்சிக்குட்பட்ட இருளர் காலனியில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்கள் குடிநீர் வசதிக்காக, 2013- - 14ம் ஆண்டு, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் ஏற்றி இருளர் காலனி, கார்த்திகேயபுரம் கிராமம் மற்றும் காலனி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் முறையாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பராமரிக்காததால் தற்போது தொட்டியின் அடிப்பகுதி சேதம் அடைந்துள்ளன.
அதாவது சிமென்ட் தளம் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும், தொட்டியின் துாண்களிலும் விரிசல் ஏற்பட்டுஉள்ளது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாக சீரமைத்து பராமரிக்காவிட்டால் தொட்டி உடைந்து விழும் அபாய நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
எனவே, ஒன்றிய அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை முறையாக பராமரித்து, தொட்டியின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.