வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: 'சீனாவின் வூஹானில் உள்ள பரிசோதனை மையத்தில் நடந்த சிறிய விபத்து காரணமாகவே, கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது' என, அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான சீனாவின் வூஹானில், 2019 நவம்பரில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பரவல் துவங்கியது. உலகெங்கும் மிகப் பெரும் பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக குழப்பமான தகவல்களே வெளியாகி வருகின்றன.
அமெரிக்காவின் தேசிய உளவு அமைப்பு, 2021ல் வெளியிட்ட ஆய்வறிக்கையில், சீனாவின் வூஹானில் உள்ள பரிசோதனை மையத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவல் துவங்கியிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், எப்படி பரவல் துவங்கியது என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை என, அதில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்க மின்சக்தி அமைப்பு நடத்திய ஆய்வு தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், வூஹானில் உள்ள பரிசோதனை மையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாகவே கொரோனா வைரஸ் பரவல் துவங்கியுள்ளது என உறுதிபட கூறப்பட்டுள்ளது.
'அமெரிக்காவில் உள்ள மருத்துவ ஆய்வு பரிசோதனை மையங்கள் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் மின்சக்தி அமைப்பில் மருத்துவ நிபுணர்கள், புலனாய்வு நிபுணர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், இந்த ஆய்வறிக்கை, முழுமையான, உறுதி செய்யப்பட்ட தகவலாக இருக்கும்' என, ஆய்வறிக்கை தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த, 'வால் ஸ்டீர்ட் ஜர்னல்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த அறிக்கையை சீனா நிராகரித்துள்ளது.