புதுச்சேரி, : சொத்தை அபகரித்துவிட்டு வீட்டை விட்டு துரத்துவதாக மகன் மீது பெற்றோர் கலெக்டரிடம் கண்ணீர்மல்க புகார் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் சண்முகா நகர் மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன்,71; ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர். இவரது மனைவி ஜெயலட்சுமி,62; இவர்களுக்கு குமரகுரு என்ற மகனும் சசிகலா என்ற மகளும் உள்ளனர்.
இதில் குமரகுரு காதல் திருமணம் செய்து வீட்டை விட்டு வெளியேறினார்.வயதான தம்பதி இருவருக்கும் இருதய நோய் இருந்ததன் காரணத்தினால் கருவடிகுப்பத்தில்உள்ள தங்களது 1200 சதுரடி வீட்டை மகள் பெயரில் உயில் எழுதினர்.
இந்நிலையில், உடல்நிலை சரியானது. மகனும் திரும்பி வந்ததால், உயிலை மீண்டும் தனது பெயருக்கு மாற்றி எழுத மகனின் உதவியை ரங்கநாதன் நாடினார்.
குமரகுருவும் உயிலை மாற்றி தருவதாக கூறி, பெற்றோரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். அங்கு, வில்லங்கம் எடுத்து பார்த்தபோது, வீடு மகன் பெயருக்கு மாறி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கேட்டபோது, குமரகுரு மிரட்டல் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து வயதான தம்பதியினர்நேற்று கலெக்டர் மணிகண்டனை சந்தித்து, தங்கள் வீட்டை மீட்டுத் தர வேண்டி கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இது குறித்து ரங்கநாதன் கூறுகையில், வாழ்வில் கடைசி காலத்தில் உள்ளோம். மகன், எங்களை ஏமாற்றியதோடு, வீட்டை விட்டு துரத்துகிறார். கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். இந்த வயதில் நாங்கள் எங்கே செல்ல முடியும்.
பெற்றோரின் சொத்து எழுதி வாங்கி கொண்டு சரிவர பராமரிக்காத பிள்ளைகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்தது, 'தினமலர்' நாளிதழில் பார்த்தோம்.
அந்த நம்பிக்கை கலெக்டரிடம் புகார் அளித்துள்ளோம் என்றார்.