கடலுார், : கடலுாரில் எரிவாயு தகன மேடைகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்புகூட்டத்தில், மாநகர பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனு:
கடலுார் மஞ்சக்குப்பம் மற்றும் கம்மியம்பேட்டையில் எரிவாயு தகன மேடை சரியாக இயங்குவதில்லை. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
மேலும், நகரின் மையப் பகுதியில் நவீன எரியூட்டு மின் தகன மேடை அமைக்க வேண்டும். இல்லையெனில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வரும் 7ம் தேதி பாடை கட்டி ஒப்பாரி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது, என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இணை ஒருங்கிணைப்பாளர்கள் குரு ராமலிங்கம், சுப்ராயன், சிவாஜி கணேசன், சட்ட ஆலோசகர் திருமார்பன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.