தேனி : தேனி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் 13 தவணையாக ரூ.2ஆயிரம் வீதம் 33ஆயிரம் விவசாயிகள் பெற உள்ளதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பி.எம்.கிஷான் திட்டத்தில் 2019 முதல் விவசாயிகள் கவுரவத்தொகை ஆண்டுக்கு ரூ. 6ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு மத்திய அரசு நேரடியாக செலுத்துகிறது.
இத்திட்டத்தில் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க அதிகாரிகள் வலியுறுத்தினர். 2022ற்கான கடைசி தவணை(13வது தவணை) நேற்றிலிருந்து விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
தேனி மாவட்டத்தில் இத்திட்டத்தில் பயன்பெற 44ஆயிரத்து 681 விவசாயிகள் பதிவு செய்து பயனைடைந்து வந்தனர். இந்நிலையில் இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்க, இ-கே.ஒய்.சி., செய்ய வலியுறுத்தப்பட்டது. மேலும் குடும்பத்தில் இருவர் பெயர் பதிவு, ஓய்வூதியம் பெறுவோர், மூதாதையர் பெயரில் நிலம் உள்ளவர்கள் என மாவட்டத்தில் 8000ஆயிரம் பேர், இந்த திட்டத்தின் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 3ஆயிரம் பேர் தங்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்காமல் உள்ளனர். 4ஆயிரத்து 500 பேர் இ-கே.ஒய்.சி., பதிவு செய்யாமல் உள்ளனர். இவர்கள் தங்கள் ஆதார் எண்ணுடன் அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ், இ சேவை மையங்களில் இ-கே.ஒய்.சி., செய்து கொள்ளலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.