மரக்காணம், : மயிலம் பொம்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடத்திற்கு, போலீஸ் பாதுகாப்புடன் வேலி அமைக்கும் பணி நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த குயிலாபாளையத்தில் மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் திருமடத்திற்கு சொந்தமாக 6 ஏக்கர் நிலம் உள்ளது.
இதை 10க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
இது குறித்து பொம்மபுரம் ஆதீன திருமடம் சார்பில் மாவட்ட ஹிந்து சமய அறநிலைத் துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் மாவட்ட இணை ஆணையர் சிவக்குமார் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் விஜயராணி முன்னிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
அந்த பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் இருக்க கடந்தாண்டு நவம்பர் மாதம் நிலத்தைச் சுற்றி வேலி அமைக்க சிமென்ட் துாண் அமைக்கப்பட்டது. அப்போது மர்ம நபர்கள் துாண்களை சேதப்படுத்தினர். இது குறித்து திருமடம் சார்பில் ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
அதன் பேரில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆதீனம் இடத்தில் வேலி அமைக்கும் பணி நடந்தது.