ஈரோடு : இடைத்தேர்தலிலும், 'பூத் சிலிப்' வழங்குவதில், தேர்தல் ஆணையம் மெத்தனம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேர்தலில் ஓட்டளிக்கும் ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது பெயர், பாகம் எண், வரிசை எண், பாகத்தின் பெயர் கொண்ட, பூத் சிலிப் தேர்தல் ஆணையத்தால் வழங்க வேண்டும்.
ஆனால், எந்த தேர்தலிலும் முறையாக வழங்காமல், தேர்தல் ஆணையம் தோல்வியையே காண்பதாக குற்றச்சாட்டு உள்ளது. அதே போல ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் நடந்துள்ளது.
இம்முறை, 40 சதவீதம் பேருக்குக்கூட, பூத் சிலிப் வழங்கவில்லை. 60 சதவீத பூத் சிலிப்கள், அந்தந்த ஓட்டுச்சாவடியில் வைத்து கொண்டு ஓட்டுச்சாவடி அலுவலர் காவலுக்கு இருந்தார்.
ஆனால், அவரிடம் சென்று வாங்க விரும்பாத வாக்காளர்கள், எந்த வேட்பாளருக்கு அல்லது கட்சிக்கு ஓட்டுப்போட தீர்மானித்தார்களோ, அவர்களுக்கான முகவர்களிடம் சென்று பெற்றனர்.
இதைக்கூட எதிர், எதிர் தரப்பினர் கணக்கிட்டு, யாருக்கு அந்த வாக்காளர் ஓட்டு போடுவார் என தீர்மானிக்கின்றனர். இச்செயலுக்கு மறைமுகமாக தேர்தல் ஆணையமும் காரணமாகிறது.
தேர்தலுக்கு மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் புதிதாக பதிவு செய்தோர், முகவரி, தொகுதி மாறியவர்களின் விபரம், புதிய பட்டியலில் உள்ளதால், அது போன்றவர்கள் ஓட்டுப்போடும் முன் சிரமப்படுகின்றனர்.
தொழில் நுட்பங்கள் வந்தாலும் தேர்தல் ஆணையமும், தேர்தல் பணி செய்வோரும் அலட்சியமாகவே செயல்படுகின்றனர்.