சென்னை: தமிழகத்திற்கு ஏராளமான தொழில் முதலீடுகள் வந்துள்ளன என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஏற்றமிகு ஏழு திட்டங்களின் துவக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இலக்கை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறோம். இலவச அரசு பஸ்சில் இதுவரை 236 கோடி முறை பெண்கள் பயணித்துள்ளனர். இலவச பஸ் பயணம் மூலம் பெண்கள் தன்னிறைவை பெற்றுள்ளனர்.
17 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு அரசு சார்பில் ஓராண்டில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நாளை எனது 70வது பிறந்தநாள், இதில் 55 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன்.
மேலும், அரசியலில் தனக்கு யாரும் இலக்கு வைக்கவில்லை, தனக்கு தானே இலக்கு வைத்து கொண்டு சிறப்பாக செயல்படுகிறேன். மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்க புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட இலக்கை நோக்கி வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
தமிழகத்திற்கு ஏராளமான தொழில் முதலீடுகள் வந்துள்ளன. இளைஞர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் வகையில் நான் முதல்வன் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.