ஓசூர்: மத்திய அரசின் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு, 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' என்ற தலைப்பிலான ஓவியப்போட்டி கடந்த, 2021 நவ.,ல் அறிவிக்கப்பட்டது. இதில், ஓசூர் காமராஜ் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் (தமிழ் மற்றும் ஆங்கில வழி) நான்காம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர் ஆல்வின் சாம் டேனியல் பங்கேற்றார். இவர், தண்ணீர் மற்றும் மரங்களை காப்பாற்ற வேண்டியதன் அவசியம் குறித்த ஓவியத்தை வரைந்தார். அதை, தலைமையாசிரியர் பத்மாவதி மூலம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பி, அங்கிருந்து டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நாடு முழுவதும் இருந்து வந்த ஓவியங்கள் பரிசீலனை செய்யப்பட்டு கடந்த வாரம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், மாணவர் ஆல்வின் சாம் டேனியல் வரைந்து அனுப்பிய ஓவியத்திற்கு தேசியளவில் முதல்பரிசு கிடைத்தது. மத்திய அரசு சார்பில், ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ் அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாணவர் ஆல்வின் சாம் டேனியலை வரவழைத்து, பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும், தலைமையாசிரியர் பத்மாவதி மற்றும் ஆசிரியர்கள், மாணவரின் தந்தை நஞ்சுண்டப்பன் ஆகியோர் நேற்று வாழ்த்து தெரிவித்தனர்.